/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வீணாகும் நகராட்சி ஆடு வதைக்கூடம்; பொது இடங்களில் சுகாதார சீர்கேடு
/
வீணாகும் நகராட்சி ஆடு வதைக்கூடம்; பொது இடங்களில் சுகாதார சீர்கேடு
வீணாகும் நகராட்சி ஆடு வதைக்கூடம்; பொது இடங்களில் சுகாதார சீர்கேடு
வீணாகும் நகராட்சி ஆடு வதைக்கூடம்; பொது இடங்களில் சுகாதார சீர்கேடு
ADDED : ஜூன் 08, 2025 09:48 PM

உடுமலை; உடுமலை நகராட்சி ஆடு வதைக்கூடம் முறையாக பயன்படுத்தப்படாததால், பொது இடங்களில் ஆடுகள் வெட்டும் போது, சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
நகராட்சி பகுதிகளில், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும், சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுத்தும் வகையிலும், பொது இடங்களில் ஆடு, மாடு அறுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நகராட்சி ஆடு வதைக்கூடத்தில், கால்நடை மருத்துவரால் ஆய்வு செய்து, அதற்கு பிறகே, ஆடு அறுக்கப்பட்டு, 'சீல்' வைத்து விற்பனை செய்ய வேண்டும். இதற்காக, உடுமலை நகராட்சி சந்தை வளாகத்தில், ஆடு வதைக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஆடு வதைக்கூடம் சுகாதாரம் இன்றியும், முறையான பராமரிப்பு இன்றியும் காணப்படுகிறது. இதை காரணமாக கூறி, இறைச்சிக்கடைகளில், அங்கேயே ஆடுகள் அறுக்கப்பட்டு, பொது இடங்கள், மழை நீர் வடிகால்களில் ரத்தம், கழிவுகள் வீசப்படுகிறது. இதனால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. மேலும், தரமான, சுகாதாரமான இறைச்சி பொதுமக்களுக்கு கிடைப்பதும் கேள்விக்குறியாக உள்ளது.
அதே போல், சந்தை வளாகத்திலுள்ள மாட்டிறைச்சி கடைகளும் சுகாதார கேடுகளுடன் காணப்படுகிறது.
நகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளாததால், இறைச்சி, மீன் கழிவுகள், நகரின் எல்லைகளிலும், போக்குவரத்து குறைவான பகுதிகளிலும் கொட்டப்படுவதால், சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து, பல முறை நகராட்சியினருக்கு பொதுமக்கள் புகார் மனுக்கள் அனுப்பினர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. இதனால், மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
எனவே, நகராட்சி அதிகாரிகள், நகராட்சி பகுதிகளிலுள்ள இறைச்சி, மீன் கடைகளுக்கு என தனி வளாகம் அமைக்கவும், பொது இடங்களில், கால்நடைகள் வெட்டுவதை தடுக்கவும், ஆடு வதைக்கூடத்தை சுகாதாரமாக பராமரித்து செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உடுமலை நகர பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.