/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும்'
/
'நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும்'
ADDED : அக் 18, 2024 06:38 AM
திருப்பூர்: 'தினமலர்' செய்தியை மேற்கோள் காட்டி, 'நீர்நிலை ஆக்கிரமிப்பில் உள்ளவர்களுக்கு, குடிசை மாற்று வாரிய குடியிருப்பு உள்ளிட்ட மாற்று திட்டங்களின் கீழ் குடியிருப்பு வசதியை ஏற்படுத்தி, அவர்களை நீர் நிலையோரங்களில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்' என, பூண்டி நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் வேண்டு கோள் விடுத்துள்ளது.
கடந்த, 2011, நவ., 6ல், திருப்பூரில் பெய்த பெருமழையில் சங்கிலிப்பள்ளத்தை ஒட்டி அமைந்த சத்யா காலனியில், வீடுகள் அடித்து செல்லப்பட்டன. 14 பேர் நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனர். தற்போதும், அங்குள்ள மக்கள் உயிர் பயத்தில் தான் வாழ்ந்து வருகின்றனர் என்பது தொடர்பான விரிவான செய்தி, நேற்று 'தினமலர்' நாளிதழில் வெளியாகி இருந்தது.
இதை மேற்கோள் காட்டி, திருமுருகன்பூண்டி நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் காதர்பாஷா, மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பிய மனு:
சங்கிலிப்பள்ளம் மற்றும் அதுபோன்ற நீர் நிலையோரம் பல ஆண்டு களாக, பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வசித்து வரும் மக்கள், சில அரசியல் கட்சிகளின் ஓட்டு வங்கிகளாக இருந்து வருகின்றனர். தேர்தல் சமயத்தில் ஓட்டுக்கு பணம் கொடுத்து, தங்களுக்கான ஓட்டுகளை உறுதிப்படுத்திக் கொள்கின்றனர்; இந்நிலை மாற வேண்டும்.
நீர் நிலையோரம், ஆபத்தான சூழலில் வாழும் மக்களுக்கு, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் உள்ளிட்ட மாற்றுத் திட்டங்களின் கீழ் கட்டப்படும் குடியிருப்புகளை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். அவர்களை நீர்நிலை பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தி, அந்த இடங்களை நீர் நிலையாகவே பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.