/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொடர் மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்வு பஞ்சலிங்க அருவிக்கு தடை நீடிப்பு
/
தொடர் மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்வு பஞ்சலிங்க அருவிக்கு தடை நீடிப்பு
தொடர் மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்வு பஞ்சலிங்க அருவிக்கு தடை நீடிப்பு
தொடர் மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்வு பஞ்சலிங்க அருவிக்கு தடை நீடிப்பு
ADDED : அக் 23, 2025 12:04 AM

உடுமலை: தொடர் மழை காரணமாக, அமராவதி, திருமூர்த்தி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 54 ஆயிரத்து, 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. கடந்த, ஜூன், 16ல் அணை நிரம்பி, நான்கு மாதம் ததும்பிய நிலையில் காணப்பட்டது.
செப்., மாதத்தில் புதிய, பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்ட நிலையில், அணை நீர்மட்டம் வேகமாக சரிந்தது. இந்நிலையில், வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்து, அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதனால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த, 17ம் தேதி, அணை நீர்மட்டம் மொத்தமுள்ள, 90 அடியில், 69.98 அடியாக இருந்தது. தொடர் மழை காரணமாக, 5 அடி நீர்மட்டம் உயர்ந்து, நேற்று காலை, 74.12 அடியாக காணப்பட்டது.
மொத்த கொள்ளளவான, 4047 மில்லியன் கனஅடியில், 2,705.89 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு, 1,227 கனஅடியாக இருந்தது. அணையிலிருந்து ஆற்றில் 25 கனஅடி நீரும், இழப்பு, 5 என, 28 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டிருந்தது.
திருமூர்த்தி அணை திருமூர்த்தி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கனமழை பெய்து, அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த, 17ம் தேதி அணை நீர்மட்டம், மொத்தமுள்ள, 60 அடியில், 37.39 அடியாக இருந்தது. தொடர் மழை காரணமாக, ஐந்து நாளில், 10 அடி நீர்மட்டம் உயர்ந்து, நேற்று காலை, 47.58 அடியாக இருந்தது.
மொத்த கொள்ளளவான, 1,935.25 மில்லியன் கனஅடியில், 1,428.02 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது. அணைக்கு வினாடிக்கு, பாலாறு வழியாக, 104 கன அடி நீரும், காண்டூர் கால்வாய் வாயிலாக, 852 கனஅடி நீர் என, 956 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையிலிருந்து, பிரதான கால்வாயில், 244 கனஅடி நீரும், குடிநீர், 21, இழப்பு, 2 என 351 கன அடி நீர் வெளியேற்றப்பட்டிருந்தது.
உடுமலையில் 85 மி.மீ., உடுமலை பகுதிகளில், கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை, உடுமலையில், 85 மி.மீ.,மழை பதிவாகியுள்ளது. அதே போல் வரதராஜபுரம், 46, பெதப்பம்பட்டி, 46, பூலாங்கிணர், 50, திருமூர்த்திநகர், 23, நல்லாறு, 23, உப்பாறு அணை, 33 மி.மீ., மழை பதிவாகியிருந்தது.
மேலும், திருமூர்த்தி அணைப்பகுதியில், 23, அமராவதி அணைப்பகுதியில், 28, மடத்துக்குளத்தில், 32, கொமரலிங்கத்தில், 46, நாட்டுக்கல்பாளையம், 22, கொட்டமுத்தாம்பாளையம், 18, தளவாய்பட்டணம், 37 மி.மீ.,மழை பதிவாகியிருந்தது.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தொடர் மழை காரணமாக, கிராமங்களிலுள்ள ஓடைகளில் மழை நீர் ஓடி, தடுப்பணைகள், குளம், குட்டைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. தொடர் மழை காரணமாக, குளிர் சீதோஷ்ண நிலை ஏற்பட்டுள்ளதோடு, பசுமை திரும்பியுள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால், பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளதோடு, தக்காளி, கத்தரி, வெண்டை உள்ளிட்ட காய்கறிகள் பறிக்க முடியாத நிலை ஏற்பட்டு, சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்துள்ளது.