/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பி.ஏ.பி.,-ல் நீர் மேலாண்மை: விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
பி.ஏ.பி.,-ல் நீர் மேலாண்மை: விவசாயிகள் எதிர்பார்ப்பு
பி.ஏ.பி.,-ல் நீர் மேலாண்மை: விவசாயிகள் எதிர்பார்ப்பு
பி.ஏ.பி.,-ல் நீர் மேலாண்மை: விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : நவ 10, 2024 04:27 AM
திருப்பூர் : பி.ஏ.பி., பாசனத்தில் உரிய வகையில் நீர் மேலாண்மை மேற்கொள்ளப் படாமல்உள்ளது. இதனால் விவசாயிகள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் பி.ஏ.பி., வாய்க்கால் பாசனம் முக்கியமான பாசனத் திட்டமாக உள்ளது. பல்லாயிரம் எக்டர் பரப்பில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இந்த பாசனத்தை நம்பி விவசாயம் செய்கின்றனர்.
பி.ஏ.பி., சட்ட விதி, 20/1993ன் படி, அணைகளில் போதுமான அளவு நீர் இருப்பு உள்ள காலத்தில், 14 நாளுக்கு ஒரு சுற்று; மாதம் தோறும் 2 சுற்றுகள் என, 9 சுற்றுக்கு குறையாமல் பாசனத்துக்கு தண்ணீர் வழங்க வேண்டும்.
ஆனால், இதை முறையாகப் பின்பற்றாமல் பொதுப்பணித்துறையினர் மெத்தனமாக உள்ளனர், என பாசன விவசாயிகள் தரப்பில் குற்றம் சுமத்தப்படுகிறது. நீர் மேலாண்மைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பி.ஏ.பி., நீர் பாசன பாதுகாப்பு சங்க விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து பாசன சபை விவசாயிகள் கூறியதாவது:
நீர் மேலாண்மை உரிய நடவடிக்கை எடுக்காததால் சுற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து விடுகிறது; மேலும் சமச்சீரான பாசனமும் கடைபிடிக்கப்படுவதில்லை. இதில், 14 நாளில் முடிக்க வேண்டிய ஒரு சுற்று, தற்போதைய நிலவரத்தில் ஏறத்தாழ, 30 நாளாகிறது.
இந்த நிலை கடந்த இரண்டு ஆண்டாக உள்ளது. இரண்டாண்டு முன் வரை, ஒரு மண்டலத்துக்கு, ஐந்து சுற்று தண்ணீர் வழங்கப்பட்டது. பி.ஏ.பி., தொகுப்பு அணைகளில் இருந்து பலமுறை அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் திறக்கப்பட்டது.
சோலையாறு, பரம்பிக்குளம் ஆகிய பி.ஏ.பி., நீர் பிடிப்பு தொகுப்பு அணைகளில் இருந்து இதுவரை கேரளாவுக்கு வழங்கும் நீர் கணக்கில் எடுத்து கொள்ளப்படாமல், திறக்கப்பட்ட நீர் 7 டி.எம்.சி., ஆகும்.இதை பி.ஏ.பி., நிர்வாகம் முறையாகப் பயன்படுத்தியிருந்தால், இரு மாவட்டங்களுக்கு தற்போதுள்ள இந்த வறட்சி சூழ்நிலை தவிர்க்கப்பட்டிருக்கும். பல்லடம், பொங்கலுார், குண்டடம், காங்கயம், வெள்ளகோவில் பகுதிகளில் மழை பற்றாக்குறையாக உள்ளது.
விவசாயிகளுக்கு தேவையான நீர்வரத்து பாசனத்திற்கான நீர் அளவு மற்றும் கேரளாவிற்கு வழங்கப்பட வேண்டிய நீர் அளவு ஆகியவற்றின் நீரியல் கணக்கீடுகளை கருத்தில் கொண்டு, திட்ட அணைகளில் உள்ள நீரின் இருப்பில் இருந்து, குறைந்த பட்சம் ஐந்து சுற்றுக்கள் தண்ணீர் வழங்க வேண்டும்.
இதை அதிகாரிகள் ஏற்றுக் கொள்ளாமல் இருந்தால், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட தயாராக உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இரண்டாண்டு முன் வரை, ஒரு மண்டலத்துக்கு, ஐந்து சுற்று தண்ணீர் வழங்கப்பட்டது. பி.ஏ.பி., தொகுப்பு அணைகளில் இருந்து பலமுறை அணையின் பாதுகாப்பு கருதி
உபரி நீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது