அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறப்பதில் நீர் நிர்வாக குளறுபடி; கருகும் நெற்பயிர்களால் விவசாயிகள் வேதனை
அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறப்பதில் நீர் நிர்வாக குளறுபடி; கருகும் நெற்பயிர்களால் விவசாயிகள் வேதனை
UPDATED : ஆக 06, 2026 07:22 AM
ADDED : ஆக 05, 2026 05:00 PM

உடுமலை: உடுமலை அமராவதி அணையிலிருந்து அரசு உத்தரவு அடிப்படையில், பாசனத்திற்கு நீர் திறப்பதிலும், நீர் நிர்வாகத்தில் மாவட்ட நிர்வாகங்கள் தலையீடு காரணமாக, பயிர்கள் காய்ந்து வருவதோடு, விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர். உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 54 ஆயிரத்து, 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. வழக்கமாக பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு ஜூன் முதல் வாரமும், புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு, ஆக., மாதமும் தண்ணீர் திறக்கப்படும்.
நடப்பாண்டு, கோடை கால மழை மற்றும் தென்மேற்கு பருவ மழைகள் ஏமாற்றியதால், குறிப்பிட்ட காலத்தில் பாசனத்திற்கு நீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
நீர் இருப்பு மற்றும் வரத்தை கணக்கிட்டு பாசனத்திற்கும், நிலைப்பயிர்களை காக்க உயிர்த்தண்ணீரும் திறக்க வேண்டும், என ஆயக்கட்டு பாசன விவசாயிகள் வலியுறுத்தினர்.
இதனையடுத்து, அமராவதி அணை பழைய பாசனத்திற்குட்பட்ட முதல் எட்டு பழைய ராஜ வாய்க்கால்களான, ராமகுளம், கல்லாபுரம், குமரலிங்கம், சர்க்கார் கண்ணாடிபுத்துார், சோழமாதேவி, கணியூர், கடத்துார் மற்றும் காரத்தொழுவு ஆகிய வாய்க்கால்களுக்குட்பட்ட 7,520 ஏக்கர் பாசன நிலங்களில், குறுவை பருவ நெல் சாகுபடி மேற்கொள்ளும் வகையில், கடந்த, 21ம் தேதி முதல், வரும் டிச., 3ம் தேதி வரை, 135 நாட்களில், 80 நாட்கள் தண்ணீர் திறப்பு, 55 நாட்கள் தண்ணீர் அடைப்பு என்ற அடிப்படையில், வினாடிக்கு 300 கன அடி வீதம், 2073.60 மில்லியன் கன அடிக்கு மிகாமல் அமராவதி அணையில் இருந்து ஆற்று மதகு வழியாக நீர் திறக்க உத்தரவிட்டது.
அதே போல், உடுமலை, மடத்துக்குளம், தாலுகாவிலுள்ள புதிய ஆயக்கட்டு பாசனத்திலுள்ள, 25,250 ஏக்கர் புதிய பாசன நிலங்களுக்கு, 21 முதல் முதல், ஆக., 5 வரை, 15 நாட்களுக்கு வினாடிக்கு, 440 கன அடி வீதம் 570.24 மில்லியன் கனஅடிக்கு மிகாமல், நிலையிலுள்ள பயிர்களைக் காப்பாற்றும் வகையில் சிறப்பு நனைப்புக்கும் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டும், அமராவதி பிரதானக் கால்வாய் வழியாக நீர் திறக்க அரசு உத்தரவிட்டது.
அரசு உத்தரவு அடிப்படையில், கடந்த, 21ம் தேதி, அணையிலிருந்து ஆற்று மதகு மற்றும் பிரதான கால்வாயில் நீர் திறக்கப்பட்டது.
கூடுதலாக நீர் திறப்பு இந்நிலையில், தாராபுரம் மற்றும் கரூர் பகுதிகளில் நிலவும் வறட்சியை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ஏற்கனவே உள்ள அரசு உத்தரவு அடிப்படையில், அணையிலிருந்து நீர் திறக்க வேண்டும், என திருப்பூர், கரூர் மாவட்ட கலெக்டர்கள் அறிவுறுத்தியதால், கூடுதலாக நீர் திறக்கப்பட்டது.
இதனால், அணை நீர் இருப்பு வேகமாக சரிந்து, 'டெட் ஸ்டோரேஜ்' நிலைக்கு சென்றதால், ஜூலை, 29ம் தேதி காலை முதல் அணையிலிருந்து நீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டது.
அதிகாரிகளின் குளறுபடியால், அணையில், எட்டு நாளில், 23.63 அடி நீர்மட்டம் குறைந்ததோடு, 899.59 மில்லியன் கனஅடி நீர் திறக்கப்பட்டு, பழைய ஆயக்கட்டு பாசன ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு, 135 நாட்கள் வழங்க வேண்டிய நீர், 8 நாட்களிலும், புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு, 15 நாட்கள் வழங்க வேண்டிய உயிர்த்தண்ணீரில், 8 நாட்கள் மட்டுமே வழங்கப்பட்டது.
கடந்த சில நாட்களாக அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக, அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
பாசனத்திற்கு தொடர்ந்து நீர் திறக்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்த நிலையில், அணை நீர்மட்டம் உயர்ந்தாலும், நீர் திறக்க முடியாது, என அதிகாரிகள் தெரிவித்துள்ளதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது:
பழைய ஆயக்கட்டு பாசன நிலங்களில் நெல் சாகுபடியும் மேற்கொள்ளபட்ட நிலையில், நீர் நிர்வாக குளறுபடி காரணமாக பயிர்கள் காய்ந்து வருகின்றன.
135 நாட்கள் நீர் திறக்க வேண்டும், என்ற அரசு உத்தரவையும் மீறி, இரு மாவட்ட கலெக்டர்கள், குடிநீர் தேவைக்கு இருப்பு வைக்க உத்தரவிட்டுள்ளார்கள் என்ற காரணம் கூறி, பாசனத்திற்கு நீர் திறக்க மறுக்கப்படுகிறது.
பாசன நீர் மேலாண்மை அடிப்படையில், பாசனத்திற்கு நீர் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அணை நிலவரம் காலை நிலவரப்படி, மொத்தமுள்ள 90 அடியில், 45.15 அடி நீர்மட்டமும், மொத்த கொள்ளளவான 4,047 மில்லியன் கனஅடியில், 947.50 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு, 638 கனஅடிநீர் நீர்வரத்து காணப்பட்டது. வெளியேற்றம் இல்லை.
