அமராவதி அணை வலது கரை மதகு புதுப்பிப்பதால்... நீர் நிர்வாகம் மேம்படும்! பிரதான கால்வாயிலும் சீரமைப்பு பணிகள் தீவிரம்
அமராவதி அணை வலது கரை மதகு புதுப்பிப்பதால்... நீர் நிர்வாகம் மேம்படும்! பிரதான கால்வாயிலும் சீரமைப்பு பணிகள் தீவிரம்
UPDATED : ஏப் 28, 2026 07:43 PM
ADDED : ஏப் 28, 2026 07:11 PM

உடுமலை: நீர் நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையில், அமராவதி அணை வலது கரை மதகு மற்றும் பிரதான கால்வாய் புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, 54 ஆயிரத்து, 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
அமராவதி அணையில் அமைந்துள்ள, கல்லாபுரம், ராமகுளம் கால்வாய்களுக்கு நீர் திறக்கப்படும் மதகு பழுது காரணமாக, பாசனத்திற்கு நீர் திறக்க முடியாத நிலை உருவானது; இப்பகுதியிலுள்ள, 3,700 ஏக்கர் நிலங்களுக்கு நீர் திறக்கப்படாமல், கடந்த சம்பா பருவ நெல் சாகுபடியும் பாதித்தது.
அமராவதி அணை மதகை உடனடியாக சரி செய்ய வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
இதனையடுத்து, வலது கரை மதகை முழுமையாக புதுப்பிக்க, அரசு, 4.25 கோடி நிதி ஒதுக்கியது. அணையிலிருந்து பாசன காலம் நிறைவு பெற்ற பின், கடந்த, பிப்., மாதம் பணிகள் துவங்கின. அணை நீருக்குள் மூழ்கி, சிக்கியிருந்த மதகு அகற்றப்பட்டது.
தொடர்ந்து, அமராவதி அணை வலதுகரை மண்ணணை மதகில் ஏற்பட்டுள்ள நீர்க்கசிவுகளை அடைக்கும் வகையில், கட்டுமான இணைப்புகளில் சிதலமடைந்த பழைய சிமெண்டு பூச்சுகளை அகற்றி விட்டு, புதிய சிமெண்டு பூச்சுகொண்டு நிரப்பும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், அணையின் உள் மற்றும் வெளிப்பகுதிகளில் நீர்கசிவுகளை அடைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு சிமெண்ட் கிரௌட்டிங் செய்தல், மேல்பூச்சு பூசுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் அணை மதகின் கதவணைகள் மற்றும் அதன் தூக்கு உபகரணங்களை முழுமையாக மாற்றியமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது.
பிரதான கால்வாய் பணி அமராவதி புதிய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ், 25,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த நிலங்களுக்கு, அமராவதி அணையிலிருந்து நீர் வழங்கும் வகையில், 64 கி.மீ., நீளம் அமராவதி பிரதான கால்வாய் அமைந்துள்ளது.
இக்கால்வாய் முறையாக பராமரிப்பின்றி, கான்கிரீட் தளம் மற்றும் சிலாப்கள் சிதிலமடைந்தும், கால்வாய் கீழ் மழை நீர் செல்லும் வகையில் அமைந்துள்ள ஏராளமான கீழ் குகை நீர் வழிப்பாதை கட்டமைப்புகள் உடைந்தும், பாசன காலங்களில் பெரும் சிக்கலை ஏற்படுத்தி வந்தது.
பாசன காலங்களில் அடிக்கடி கால்வாய் உடைப்பு மற்றும் நீர் இழப்பு அதிகரித்து வந்தது. அமராவதி பிரதான கால்வாயை முழுமையாக புதுப்பிக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தி வந்த நிலையில், அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டும் நிதி ஒதுக்கி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நடப்பாண்டு, அமராவதி பிரதான கால்வாயில், அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் புதுப்பிக்க, ரூ.5.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், அமராவதி பிரதான கால்வாய் சரகம், 16.5 மைல் முதல் 28.7 மைல் வரை அமைந்துள்ள, குறுக்கு கட்டட அமைப்புகளை புனரமைத்தல் திட்டத்தின் கீழ், பிரதான கால்வாயின் குறுக்கே, அமைந்துள்ள, 13 கீழ்மட்ட குகை நீர் வழிப்பாதைகள், முழுமையாக அகற்றப்பட்டு, கான்கிரீட் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
மேலும், பிரதான கால்வாயிலிருந்து பாசனத்திற்கு நீர் வழங்கும் வகையில் அமைந்துள்ள, மதகுகள் மற்றும் கதவணைகள் சிதிலமடைந்து காணப்பட்டது. இதில், 20 மதகுகள், அவற்றுக்கான கதவணைகள் ஆகியவற்றை புதுப்பித்தல் பணிகளும் நடந்து வருகிறது.
'பிரதான கால்வாய் கரையில் சேதமடைந்த சிலாப்புகள், 314 மீட்டர் நீளத்திற்கு மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த பிப்., மாதம் பாசனத்திற்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்ட பின், பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
வரும், ஜூன் மாதத்திற்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது; இப்பணிகளால் நீர் நிர்வாகம் மேம்படும்,' என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
