/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆலாம்பாளையம் குளத்திற்கு நீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
/
ஆலாம்பாளையம் குளத்திற்கு நீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
ஆலாம்பாளையம் குளத்திற்கு நீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
ஆலாம்பாளையம் குளத்திற்கு நீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : டிச 23, 2025 07:00 AM

உடுமலை: உடுமலை அருகேயுள்ள ஆலாம்பாளையம் குளத்திற்கு, திருமூர்த்தி அணையிலிருந்து நேற்று நீர் திறக்கப்பட்டது.
உடுமலை அருகே ஆலாம்பாளையத்தில், 76 ஏக்கர் பரப்பில், அமைந்துள்ள பூசாரிநாயக்கன் குளம், சுற்றுப்புறத்திலுள்ள குறிச்சிக்கோட்டை, மடத்துார், குரல்குட்டை, மலையாண்டிபட்டணம், மருள்பட்டி, உரல்பட்டி என பல்வேறு கிராமங்களுக்கு, நிலத்தடி நீர் மட்ட ஆதாரமாகவும், குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
இக்குளத்துக்கு முன்பு, மழை நீர் ஓடைகள் வாயிலாக, திருமூர்த்தி பாலாறு வழியாக நீர் வரத்து கிடைத்து வந்தது. திருமூர்த்தி அணை, பி.ஏ.பி., திட்டம் உருவாக்கப்பட்டதால், குளத்திற்கு நீர்வரத்து முற்றிலும் தடைபட்டது.
இதனையடுத்து, அப்பகுதி விவசாயிகளின் பல்வேறு போராட்டங்களுக்குப்பின், கடந்த, 2012 முதல், பி.ஏ.பி., துணை அமைப்பாக இக்குளம் சேர்க்கப்பட்டு, ஆண்டுக்கு, 39.86 மில்லியன் கனஅடி நீர் வழங்க அரசு உத்தரவும், உயர் நீதிமன்ற உத்தரவும் உள்ளது.
நடப்பாண்டு பருவ மழைகள் குறைந்து, குளம் வறண்டு காணப்படும் நிலையில், ஆலாம்பாளையம் குளத்திற்கு நீர் திறக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தினர்.
விவசாயிகள் கோரிக்கையை ஏற்று, பி.ஏ.பி., பாசன திட்டத்தின், துணை பாசன பகுதியாக கருதி, திருமூர்த்தி அணையிலிருந்து, பொது கால்வாய் கி.மீ.,1.200 ல் பிரியும் உடுமலை கால்வாய் சரகம், 5.130லிருந்து, பிரியும் மானுப்பட்டி கால்வாய் வழியாக, ஆலாம்பாளையத்திலுள்ள பூசாரிநாயக்கன் குளத்திற்கு, நேற்று முதல், 25ம் தேதி வரை, திருமூர்த்தி அணையிலிருந்து, 20 மில்லியன் கனஅடி நீர், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காக திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில், நேற்று மானுப்பட்டி கால்வாய் வழியாக, பூசாரி நாயக்கன் குளத்திற்கு நீர் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

