/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பூண்டியில் வேகமெடுக்கும் குடிநீர் கட்டமைப்பு பணி
/
பூண்டியில் வேகமெடுக்கும் குடிநீர் கட்டமைப்பு பணி
ADDED : ஏப் 29, 2025 06:41 AM
திருப்பூர்:
திருமுருகன்பூண்டி நகராட்சி கடந்த 2021ல், பேரூராட்சி அந்தஸ்தில் இருந்து, நகராட்சியாக தரம் உயர்ந்தது. குடிநீர் வினியோக பிரச்னை தலைவிரித்தாடியது.
கோடையில், பல்வேறு வார்டுகளில் தென்பட்ட குடிநீர் பற்றாக்குறையால், மக்கள் சாலைக்கு வந்து, மறியல் செய்து போராட வேண்டிய நிலை இருந்தது. புதிதாக வீட்டு குடிநீர் இணைப்பு கேட்டு, 2,000க்கும் மேற்பட்ட மனுக்கள், நிலுவையில் வைக்கப்பட்டிருந்தன.
பல ஆண்டுகளாக இணைப்பு வழங்கப்படாததால், பலரும் நகராட்சியின் அனுமதியின்றி, இணைப்பு எடுத்து, குடிநீரை பயன் படுத்தி வந்தனர். மா.கம்யூ., உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, விதிமீறி பெறப்பட்ட குடிநீர் இணைப்புகள் அடையாளம் காணப்பட்டு, அவை துண்டிக்கப்பட்டன; அபராதம் வசூலிக்கப்பட்டு, குடிநீர் இணைப்புகள் வரைமுறை செய்யப்பட்டன.
நகராட்சி தலைவர் குமார் கூறியதாவது:
நகராட்சியில் உள்ள அனைத்து வார்டு மக்களுக்கும் தடையற்ற குடிநீர் சப்ளை செய்யும் நோக்கில் துரைசாமி நகர், வி.ஜி.வி., கார்டன், சபரிபுரம், பாலாஜி நகர் உள்ளிட்ட, 6 இடங்களில், 2 முதல், 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டும் பணி, நிறைவு பெறும் நிலையில் உள்ளது.
இரண்டாவது குடிநீர் திட்டத்தில் இருந்து இரு இடங்களில் நீர் எடுக்க, குடிநீர் வடிகால் வாரியத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
இன்னும் இரு மாதங்களில் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று, சீரான நீர் வினியோகத்திற்கு வழிவகை ஏற்படுத்தப்படும்.
14 ஆண்டுக்கு பின் தீர்வு
கடந்த, 3 ஆண்டுக்கு முன்பு, 2,000 விண்ணப்பங்கள் குடிநீர் இணைப்பு கேட்டு, காத்திருப்பு நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இதில், 1,782 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 14 ஆண்டுகளுக்கு பின், குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
- குமார், நகராட்சி தலைவர்.