/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடிநீர்... சாக்கடை... சாலை... எல்லாமே 'சங்கடம்'
/
குடிநீர்... சாக்கடை... சாலை... எல்லாமே 'சங்கடம்'
ADDED : ஏப் 25, 2025 11:42 PM

'ஸ்மார்ட் சிட்டி' திட்டம் செயல்படுத்தப்படும் மாநகராட்சியாக இருந்தபோதும், அனைத்து அடிப்படை வசதிகளுக்கும் ஏங்கும் மாநகராகத் தான் திருப்பூர் திகழ்கிறது. ஒவ்வொரு வார்டுகளிலுமே திரும்பிய இடங்களில் எல்லாம் குறைகளே காணப்படுகின்றன. இந்த வாரம், மாநகராட்சி 12வது வார்டு குறித்து பார்ப்போம்.
---
மாநகராட்சி 12வது வார்டு பகுதிகள்: 15 வேலம்பாளையம், சொர்ணபுரி அவென்யூ, அமர்ஜோதி கார்டன், அம்மையப்பன் நகர், அருமைக்காரர் தோட்டம், பி.டி.ஆர்., நகர், கரிய காளியம்மன் கோவில் வீதி, மூகாம்பிகை நகர், நேரு வீதி, ரிங் ரோடு, ஸ்ரீபதி நகர், வெங்கடேஸ்வரா நகர் உள்ளிட்ட பகுதிகள்.
அரசு மருத்துவமனை
திறப்பு இழுத்தடிப்பு
வார்டில், 20 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்; நுாறு படுக்கை வசதிகளை கொண்ட அரசு மருத்துவமனை 15 வேலம்பாளையத்தில் 'ஜைக்கா' நிதி, ஐந்து கோடியில் கட்டப்பட்டது. பணி முடிந்து, ஒன்றரை ஆண்டு கடந்தும் திறக்கப்படவில்லை. வார்டு மக்கள் அரசு மருத்துவக் கல்லுாரி அல்லது அவிநாசி அரசு மருத்துவமனை செல்ல வேண்டியுள்ளது.
பல்லாங்குழி சாலைகள்
வாகனங்கள் தடுமாற்றம்
வார்டில் பிரதானமாக, அதிகளவில் வாகனங்கள் பயணிக்கும் சாலையாக, வேலம்பாளையம் - அம்மன் நகர் - சிறுபூலுவப்பட்டி ரிங் ரோடு உள்ளது. இந்த ரோட்டில், பள்ளக்காட்டுத்தோட்டம், அமர்ஜோதி கார்டன் 'ஆர்ச்' அருகே சாலை சேதமாகியுள்ளது. மழைநீர் வழிந்தோடி சாலையின் பாதி வரை மண் நிறைந்துள்ளது. கனரக வாகனங்கள் எதிரெதிரே வரும்போது, இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி, சறுக்கி விழும் நிலை உள்ளது. கரிய காளியம்மன் கோவில், நடுநிலைப்பள்ளி முன்புறம் தார் பெயர்ந்து, சாலை, குண்டும் குழியுமாக உள்ளது. வளைவில் திரும்பும் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர்.
மேல்நிலைப்பள்ளி எதிரில், அம்மையப்பர் நகர் முதல் டிேஸா ஸ்கூல் வீதி வரை ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. தினசரி ஒரு விபத்து நடந்து விடுகிறது. சமீபத்தில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணி துவங்கப்பட்ட பகுதி, தரைப்பாலம் உள்ள இடங்களில் சாலை தோண்டப்பட்டு சரிவர மூடப்படவில்லை.
துரத்திக் கடிக்கும்
தெரு நாய்கள்
அவிநாசி ரோடு துவங்கி 15 வேலம்பாளையம், சோளிபாளையம் ரோடு, சொர்ணபுரி அவென்யூ, சிறுபூலுவப்பட்டிரி ரிங் ரோடு என வார்டில் எந்த வீதியில் திரும்பினாலும், நாய்கள் கூட்டமாக திரிகின்றன. வாகனங்களில் செல்வோரை துரத்திக் கடிக்கின்றன. நாய்களைப் பிடித்து செல்ல வேண்டும் என்கின்றனர் மக்கள்.
10 நாளுக்கு ஒருமுறைதான்
குடிநீர் வினியோகம்
குடிநீர் எட்டு முதல் பத்து நாளைக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. மக்கள் தொகை அதிகமாக உள்ளதால், ஐந்து நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க வேண்டும். சொர்ணபுரி அவென்யூ, சோளிபாளையம் ரோடு, 15 வேலம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட இடங்கள் மேட்டுப்பாங்கான சாலையாக இருப்பதால், பத்து நாளைக்கு ஒருமுறை வழங்கப்படும் குடிநீரும் முழுமையாக வீடுகளுக்கு சென்று சேர்வதில்லை; தட்டுப்பாடு உள்ளது.
ஆக்கிரமிப்பு அதிகரிப்பு
சுருங்கிப்போன சாலை
அவிநாசி ரோடு - 15 வேலம்பாளையம் - சோளிபாளையம் சாலை, 15 வேலம்பாளையம் - அம்மன் நகர் - சிறுபூலுவப்பட்டி சாலை, கரியகாளியம்மன் கோவில் துவங்கி தண்ணீர் பந்தல் சிக்னல் சந்திப்பு என, 15 கி.மீ.,க்கு அதிகமான சாலை நெடுஞ்சாலைத்துறை வசம் உள்ளது. சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து, சாலை சுருங்கி வருகிறது. விபத்து ஏற்படும் முன், மாற்றுத்தீர்வு காண வேண்டியது அவசர அவசியம். வி.ஏ.ஓ., அலுவலகம் அருகே மழைபெய்யும் போதெல்லாம், வீடுகளுக்கு மழைநீர் புகுந்து விடுகிறது. பத்தாண்டு பிரச்னைக்கு தீர்வு இல்லை. தொடர்ந்து, மனு அளித்து வருகிறேன்.
---
வேலம்பாளையம் கரிய காளியம்மன் கோவில் முன், சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
அம்மையப்பர் நகர் டிஸ்ஸோ பள்ளி வீதி ரோட்டில் பெரிய பள்ளம் உள்ளது.
சொர்ணபுரி லே அவுட் சந்திப்பில் குடிநீர் குழாய் உடைந்துள்ளது.
சோளிபாளையம் ரோடு, விநாயகர் கோவில் அருகே எச்சரிக்கை அறிவிப்பு வைத்தும் குப்பை கொட்டப்பட்டுள்ளது.
சோளிபாளையம் ரோடு, பெட்ரோல் பங்க் அருகே குப்பை கொட்டப்பட்டுள்ளது.
சொர்ணபுரி என்கிளேவ் பகுதியில் குப்பை கொட்டாமலிருக்க வேலி அமைக்கப்பட்டுள்ளது.
வேலம்பாளையத்தில், திறப்பு விழா காணப்படாத அரசு மருத்துவமனை.
வேலம்பாளையம் நகர் நல மையம் அருகே மேல்நிலைத்தொட்டியில் ராட்சத தேன்கூடு.
வார்டில் சுற்றித் திரியும் நாய்கள்.
பள்ளக்காட்டு தோட்டம் பகுதியில், சாக்கடை கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கியுள்ளது.
அமர்ஜோதி கார்டன் ரோட்டில் தேங்கியுள்ள மணல்.