/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மூளிக்குளத்துக்கு நீர் திறப்பு தடை
/
மூளிக்குளத்துக்கு நீர் திறப்பு தடை
ADDED : மே 29, 2025 12:44 AM

திருப்பூர், ; மூளிக்குளத்தில், சாக்கடை கழிவுநீர் கலப்பதை தடுக்கும் கால்வாய் பணி நடக்க இருப்பதால், அணைக்காடு தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டாமென, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு பகுதியில் உள்ள மூளிக்குளத்துக்கு, அணைக்காடு பகுதியில் உள்ள, நொய்யல் தடுப்பணையில் இருந்து, வாய்க்கால் வழியாக தண்ணீர் எடுத்துச்செல்லப்படுகிறது. மாநகராட்சி கழிவுநீர் கால்வாய்கள், இந்த வாய்க்காலில் கலந்து வருகின்றன.
ஆகாயத்தாமரைகள் ஆக்கிரமித்த குளம்
சாக்கடை கழிவுநீர், வாய்க்காலில் கலப்பதை தடுக்க, புதிய கால்வாய் அமைக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. கழிவுநீர் தொடர்ந்து குளத்தில் கலந்து கொண்டிருப்பதால், குளம் முழுவதும் ஆகாயத்தாமரை மூடியுள்ளது. குளத்துக்கு செல்லும் வாய்க்காலிலும் ஆகாயத்தாமரை படர்ந்து, அடைப்பை ஏற்படுத்தியுள்ளது.
விரைவில், கால்வாய் பணி துவங்க இருப்பதால், நொய்யல் தடுப்பணையில் இருந்து, மூளிக்குளத்துக்கு செல்லும் ஷட்டர் திறக்க வேண்டாமென உத்தரவிடப்பட்டுள்ளது. அணைக்காடு தடுப்பணையில், நொய்யல் ஆற்றில் மழை வெள்ளம் உற்சாகமாக பாய்ந்தோடியும், குளத்துக்கு தண்ணீர் செல்லவில்லை.
திருப்பூர் வேர்கள் அமைப்பினர் கூறுகையில், 'மாநகராட்சி மூலம், குளத்துக்குள் சாக்கடை கழிவுநீர் கலக்காதபடி, புதிய கால்வாய் அமைக்கும் திட்ட பணி துவங்க உள்ளது. குளத்தில் தண்ணீர் இருந்தால் பணிகளை செய்வது சிரமம். குளத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. தண்ணீர் வற்றியதும், ஆகாயத்தாமரையை முழுமையாக அகற்றவும் திட்டமிட்டுள்ளோம்,' என்றனர்.