'நாங்களும் மனிதர்கள்தான்...’ துாய்மைக்காவலர்கள் வேதனை
'நாங்களும் மனிதர்கள்தான்...’ துாய்மைக்காவலர்கள் வேதனை
UPDATED : அக் 10, 2026 10:51 PM
ADDED : அக் 10, 2026 09:36 PM

பல்லடம்: நாங்களும் மனிதர்கள் தான்; ஆனால் எங்களை யாரும் மனிதர்களாக நினைப்பதில்லை என கரைப்புதுாரில் போராட்டத்தில் ஈடுபட்ட துாய்மை காவலர்கள் வேதனை தெரிவித்தனர்.
பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார் ஊராட்சியில் 20க்கும் மேற்பட்ட துாய்மை காவலர்கள் பணியாற்றுகின்றனர். பிடித்தம் செய்யப்பட்ட சம்பளத்தை வழங்க வேண்டும், உரிய மரியாதை தர வேண்டும் என வலியுறுத்தி நேற்று காலை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் கூறியதாவது:
தினமும் காலை 6:00 மணிக்கு வந்தால், டிபன் கூட சாப்பிடாமல் மதியம் 1:00 மணி வரை வேலை செய்கிறோம். 12:00 மணிக்கு டீ, பன் மட்டும் தருகின்றனர். கையுறையுடன், கடும் துர்நாற்றத்துக்கு இடையே கழிவுகளை அள்ளுகிறோம். நாப்கின், இறைச்சி கழிவு, அழுகிய காய்கறி என அனைத்தையும் ரோட்டில் வீசுகின்றனர். எங்களை யாரும் மனிதர்களாக கூட மதிப்பதில்லை.
புதிதாக வந்த மேற்பார்வையாளர் மரியாதையின்றி பேசுகிறார். 'வேலை செய்தால் செய்யுங்கள், இல்லையெனில் செல்லுங்கள்' என்கிறார். உடல்நிலை சரியில்லாமல் கூட வேலை செய்கிறோம். ஓரிரு நாள் விடுப்பு எடுத்தால் உடனே சம்பளத்தை பிடித்து விடுகின்றனர். இந்த சம்பளத்தில் குடும்பம் நடத்த முடியுமா?
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பிடித்த சம்பளத்தை வழங்க வேண்டும், உரிய மரியாதை தர வேண்டும் என வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். 'முதலில் வேலைக்கு செல்லுங்கள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறியதை அடுத்து, போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.
கரைப்புதுார் ஊராட்சியில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட துாய்மைக்காவலர்கள்.
