திருப்பூர்: ரேஷன் பணியாளர்களிடம் தேவை பட்டியல் பெறாமல், கூடுதல் மளிகை பொருட்கள் அனுப்புவதை கூட்டுறவுத்துறை கைவிட வேண்டும் என, கூட்டுறவு பணியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், 1,135 ரேஷன் கடைகள் உள்ளன. ஏறத்தாழ, எட்டு லட்சம் கார்டுதாரர்கள் உள்ளனர். கார்டுதாரர்களுக்கு, வழக்கமாக வழங்கப்படும் பொருட்கள் தவிர டீத்துாள், உப்பு மற்றும் தட்டைப்பயறு, கொள்ளு, மஞ்சள் துாள், கடுகு, சலவை சோப்பு, குளியல் சோப்பு உள்ளிட்ட பல்வேறுவகை மளிகை பொருட்களும் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
ரேஷனில் விற்பனை செய்யப்படும் மளிகை பொருட்களை பொதுமக்கள் விரும்புவதில்லை. கட்டாயத்தின் பேரிலேயே கார்டுதாரர் பலரும், வாங்குகின்றனர். விற்பனையாகாமல் இருப்பில் இருந்தாலும், கூடுதலாக மளிகை பொருட்களை கடைகளுக்கு அனுப்புவதால், ரேஷன் பணியாளர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. ரேஷன் பணியாளர்களிடம் தேவை பட்டியல் பெறாமல், மளிகை பொருட்களை கட்டாயப்படுத்தி அனுப்பக்கூடாது என, திருப்பூர் மாவட்ட பணியாளர் சங்கம், கூட்டுறவு இணைபதிவாளர் மற்றும் துணை பதிவாளரிடம் கடிதம் அளித்துள்ளது.
திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்க தலைவர் கவுதமன் கூறியதாவது:
திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில், பணியாளர்களிடம் தேவை பட்டியல் பெறாமலேயே கட்டாயப்படுத்தி, மளிகை பொருட்களை அனுப்புகின்றனர். 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் டீ- துாள், உப்பு உள்ளிட்டவை இருப்பு இருக்கும் நிலையிலும், மீண்டும் மீண்டும் கூடுதலாக 5 முதல் 10 பெட்டிகள் வரை அனுப்புகின்றனர்.
மளிகை பொருட்களை விற்பனை செய்யும்போது, கார்டுதாரர் - ரேஷன் பணியாளரிடையே வாக்குவாதங்கள் ஏற்படுகின்றன. விற்பனையாகாத, காலாவதியான மளிகை பொருட்களை திரும்பப்பெறுவதும் இல்லை. பல ரேஷன் கடைகளில் உள்ள எலிகளால் மளிகைப்பொருட்கள் சேதமடையும்போது, அதற்கான இழப்பீடுகளையும் விற்பனையாளர்களே செலுத்தவேண்டியுள்ளது.
பணியாளர்களிடம் தேவை பட்டியல் பெற்று, அதனடிப்படையில் ரேஷன் கடைகளுக்கு மளிகை பொருட்கள் வழங்கவேண்டும். இது தொடர்பாக, கூட்டுறவு சங்க இணை மற்றும் துணை பதிவாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். கோரிக்கைக்கு செவிமடுக்காதபட்சத்தில், போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.