குப்பை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் இல்லாவிடில் போராடுவோம்: இ.கம்யூ.
குப்பை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் இல்லாவிடில் போராடுவோம்: இ.கம்யூ.
ADDED : ஜூலை 09, 2026 11:50 PM
திருப்பூர்: 'திருப்பூரில் நீடித்து வரும் குப்பை பிரச்னைக்கு, தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும்; இல்லையெனில், பொதுமக்கள், தொழில் முனைவோர், வணிகர்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தப்படும்,' என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எச்சரித்துள்ளது.
இ.கம்யூ., திருப்பூர் மாவட்ட குழு கூட்டம், கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் சேகர் தலைமை வகித்தார். மாநில கட்டுப்பாட்டு குழு தலைவரும், எம்.பி.,யுமான சுப்பராயன், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் இசாக், மாவட்ட செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
திருப்பூர் மாநகராட்சியின், 60 வார்டுகள் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில், குப்பை, உணவுக் கழிவு, இறைச்சிக் கழிவு உள்ளிட்டவை மலைபோல் தேங்கியுள்ளதால், கடும் துர்நாற்றம் வீசி, பொதுமக்கள் சுகாதார பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
தேங்கிய குப்பைக்கு தீ வைப்பதால் புகைமூட்டம் ஏற்பட்டு, சுற்றுப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட சுவாசப் பிரச்னைகள் உருவாகின்றன. இதனால் நோய்தொற்று பரவும் அபாயமும் அதிகரித்துள்ளது.
ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் அன்னியச் செலாவணி ஈட்டித் தரும் பின்னலாடை நகரமான திருப்பூரில், குப்பை பிரச்னையால் வெளிநாட்டு வர்த்தகர்களின் வருகையே பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில் துறையினர் கவலை தெரிவிக்கின்றனர்.
திருப்பூரில் நீடித்து வரும் குப்பை பிரச்னைக்கு தமிழக அரசு உடனடியாக போர்க்கால அடிப்படையில் நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும். இல்லையெனில், பொதுமக்கள், தொழில் முனைவோர், வணிகர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழல் உருவாகும்.
