/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நடுவுல கொஞ்சம் வேகத்தடையை காணோம்
/
நடுவுல கொஞ்சம் வேகத்தடையை காணோம்
ADDED : அக் 02, 2025 01:11 AM

பல்லடம்; கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் அமைந்துள்ளது. கோவையில் இருந்து டெல்டா மாவட்டங்களை இணைக்கும் முக்கிய வழித்தடமாக பல்லடம் உள்ளதால், தினசரி, 230க்கும் அதிகமான பஸ்கள் பல்லடம் பஸ் ஸ்டாண்ட் வந்து செல்கின்றன. ஒரு நிமிடத்துக்கு ஒரு பஸ், ஸ்டாண்ட்டுக்குள் வந்து பயணிகளை இறக்கி, ஏற்றி செல்கிறது.
பஸ்களின் வேகத்தை கட்டுப்படுத்த, பஸ் ஸ்டாண்டுக்குள் வலதுபுறம் மற்றும் இடது புற நுழைவுவாயிலில் வேகத்தடை அமைக்கப்பட்டது. தொடர்ச்சியாக வாகனங்கள் பயணித்ததும், மழை, வெயில் காரணமாகவும் சேதமாகி, வேகத்தடை பெயர்ந்து வந்து விட்டது. இடது, வலது ஓரத்தில் மட்டும் வேகத்தடை உள்ளது. நடுவில், பத்தடிக்கு மேல் வேகத்தடையே இல்லை.
இதனால், பஸ்கள் வேகமெடுக்கின்றன. சாலையை கடக்க முற்படும் பயணிகள் பயந்து விடுகின்றனர். சிலர் ஓடி கடந்து விடலாம் என நினைத்து கடக்க முற்படுகையில், ஏர்ஹாரன் உதவியுடன் அதிக ஒலி எழுப்பியபடி, பஸ்கள் வேகமாக வருவதால், பலரும் பயப்படுகின்றனர். இதனால், விபத்து ஏற்படும் சூழல் ஏற்படுகிறது. வேகத்தடை இல்லாததை சவுகரியமாக்கி, பஸ் ஸ்டாண்ட் என்றும் பாராமல், சில பஸ் டிரைவர்கள், பஸ்களையும் முந்தி செல்ல முயல்கின்றனர். பஸ் ஸ்டாண்டுக்குள் பஸ் ரேஸ் நடப்பதை தவிர்க்க, வேகத்தடையை சீரமைக்க வேண்டும். விதிமீறி வேகமெடுக்கும் பஸ்களை போலீசார் கண்காணித்து, அபராதம் விதிக்கவும் வேண்டும்.