/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பயிர்கள் கருகினால் கோர்ட்டில் முறையிடுவோம்' பி.ஏ.பி., விவசாயிகள் ஆவேசம்
/
'பயிர்கள் கருகினால் கோர்ட்டில் முறையிடுவோம்' பி.ஏ.பி., விவசாயிகள் ஆவேசம்
'பயிர்கள் கருகினால் கோர்ட்டில் முறையிடுவோம்' பி.ஏ.பி., விவசாயிகள் ஆவேசம்
'பயிர்கள் கருகினால் கோர்ட்டில் முறையிடுவோம்' பி.ஏ.பி., விவசாயிகள் ஆவேசம்
ADDED : பிப் 04, 2024 02:21 AM

பல்லடம்;''பி.ஏ.பி., பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படாததால், பயிர்கள் கருகி நஷ்டம் ஏற்பட்டால், கோர்ட்டில் முறையிடுவோம்'' என்று விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத்துக்கு (பி.ஏ.பி.,) தண்ணீர் திறக்க வலியுறுத்தி, பி.ஏ.பி., பாசன விவசாயிகள், திருப்பூர் மாவட்டம், பல்லடம் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார்.
மாநில தலைவர் சண்முகம் பேசியதாவது:
கடந்த ஆண்டு பருவ மழை எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை. பி.ஏ.பி.,யில் ஒரு மண்டலத்துக்கும் இன்னொரு மண்டலத்துக்கும், 15 நாள் இடைவெளியில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
இதன்படி, பிப்., 1 அன்று தண்ணீர் திறக்கப்படும் என்று நம்பி எண்ணற்ற விவசாயிகள் வெங்காயம் உள்ளிட்ட குறுகிய கால பயிர்களை சாகுபடி செய்துள்ளோம். கோவை, திருப்பூர் மாவட்டங்களில், பரவலாக தென்னை விவசாயம் நடந்து வரும் சூழலில், தண்ணீர் திறக்கப்படாததால் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு முழுக்க முழுக்க பொதுப்பணித்துறை தான் காரணம். சாகுபடி செய்த பயிர்கள் கருகி நஷ்டம் ஏற்பட்டால், கட்டாயமாக இழப்பீடு கேட்டு கோர்ட்டுக்கு செல்வோம். காமராஜரால் கொண்டுவரப்பட்ட ஆனைமலையாறு - நல்லாறு திட்டம், காலம் கடந்தும் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.
ஆட்சியாளர்களின் அலட்சியமே இதற்கு முழு முதல் காரணம். பல லட்சம் ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடந்து வரும் கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி, ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
''தண்ணீர் திறக்கவில்லை எனில், பொள்ளாச்சி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம்'' என்றும் விவசாயிகள் கூறினர்.