/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தமிழ் போல் இனிதாவது எங்கும் காணோம்!
/
தமிழ் போல் இனிதாவது எங்கும் காணோம்!
ADDED : பிப் 21, 2026 06:53 AM

நம் எண்ண வெளிப்பாட்டின் கருவியாக இருப்பது மொழி. அது பல வடிவமாக இருந்தாலும் தாய்மொழிக்கென்று தனியிடம் இருக்கிறது - அது முதன்மையானது. அத்தகைய தாய்மொழியாம் நம் தமிழ்மொழி குறித்து பேச்சாளர்கள் நம்முடன் பகிர்ந்தவை:
தமிழார்வம் குறையக்கூடாது மகாலட்சுமி, பட்டிமன்ற பேச்சாளர்: சிறந்தே பிறந்த மொழி நம் தமிழ். இன்றைய தலைமுறையிடம் தமிழார்வம் சற்று குறைவாக இருக்கிறது. பள்ளி, கல்லுாரி, அலுவலகங்களில் பிற மொழிகளை முன்வைக்கிறார்கள். இந்நிலை மாற வேண்டும். அலுவலகங்கள் போன்றவற்றில் நடக்கும் விழாக்களில் தாய்மொழியை முதன்மைப்படுத்த வேண்டும். பெற்றோர் குழந்தைகளுக்கு தாய்மொழியை பொருள் புரியும் படி கற்பிக்க வேண்டும்.
வெளிநாட்டில் தமிழார்வம் பூர்ணிமா, பட்டிமன்ற பேச்சாளர்: அமெரிக்காவில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சியின் முன் 'வருக வருக' என்று தமிழில் இருக்கும். செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பும்போது, பழமையான மூத்த மொழி தமிழில் பதிவு செய்து அனுப்பினார்கள். செம்மொழி மாநாடு, சிறப்பு கருத்தரங்கம் நடக்கிறது. வெளிநாடுகளில் தமிழ் கற்கும் ஆர்வம் அதிகமாக இருக்கிறது. திருக்குறள், பாரதியார் கவிதைகள் உலகின் பல இடங்களில் வலம் வருகிறது. தமிழ் பத்திரிகைகள் அதிகம் வாசிக்கப்படுகின்றன. பேச்சு வழக்கில் இல்லாத திருக்குறளை பற்றிய மாநாடு, கருத்தரங்கு, போட்டிகள் நடத்தப்படுகிறது. இப்படி பல முயற்சிகளால் தமிழ் வளர்கிறது.
தமிழ் மொழி வளர்கிறது பாண்டியராஜ், எழுத்தாளர்: நம் உணர்வை, எண்ணத்தை வெளிப்படுத்த பயன்படுவது மொழி. அது எளிதில் புரியும்படி தாய்மொழியில் இருக்க வேண்டும். தமிழ் படைப்புகள், உலக அளவில் மொழிபெயர்க்கப்படுகிறது. உலகில் இரண்டாவது அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட நுால் திருக்குறள். மிகப்பெரிய கருத்துகளை எளிதில் விளக்கக்கூடியது.
முக்காலத்திற்கும் ஏற்றதாக உள்ளதால் எக்காலத்துக்கும் பொருத்தமானது. அது இன்று பல இடங்களில் விரும்பி படிக்கப்படுகிறது என்றால் அது தமிழின் வளர்ச்சி. இன்று எல்லா மொழியும் கலந்து பேசினாலும் தமிழ் வளரத்தான் செய்கிறது. திருப்பூர் வந்த வட மாநிலத்தவரும் தமிழ் கற்கிறார்கள், படிக்கிறார்கள்.
தமிழ் முதன்மை பெறட்டும் பூபாலன், செயலாளர், பொள்ளாச்சி இலக்கிய வட்டம்: தாய்மொழி என்பது அவசியமானது. நம் தாய்மொழி தமிழ், பழமையானது, தொன்மையானது. அதை கவனமாக பாதுகாக்க வேண்டும். தமிழின் வளர்ச்சிக்கு அரசு எடுக்கும் முன்னெடுப்புகளில் மேலும் தீவிரம் வேண்டும்.
தாய்மொழி வழிக்கல்வியை ஊக்குவிக்க வேண்டும். எந்தப்பாடம் கற்றாலும் தமிழ் ஒரு பாடமாக கட்டாயம் இருக்க வேண்டும். அரசு அலுவலகம், தபால் நிலையம் போன்றவற்றில் தமிழுக்கான இடம் சிறிதாக இருக்கிறது.
இந்நிலை மாறி எல்லா இடத்திலும் தமிழை முதன்மையாக்க வேண்டும். அது மொழியை நெடுங்காலத்துக்கு பாதுகாக்கும்.
இன்று (பிப். 21)
சர்வதேச
தாய்மொழி தினம்

