
பல்லடம் தாய் அறக்கட்டளை சார்பில், 'தை மகளே வருக' எனும், பொங்கல் விழா, 11வது ஆண்டாக வனாலயத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. ஓவியர் டிரஸ்கி மருது சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
தாய் அறக்கட்டளை நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, பாலசுப்பிரமணியம் மற்றும் விவசாய சங்க தலைவர் செல்லமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சூழலியலாளர் கோவை சதாசிவம் பேசுகையில், ''நமது முன்னோர்களின் வழிமுறையை பின்பற்றி பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும்'' என்றார்.
முன்னதாக, பவானி நதி பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் சத்திய சுந்தரி, ஈரோடு பழங்குடியின் செயற்பாட்டாளர் குணசேகரன், சூழலியலாளர் கோவை சதாசிவம் மற்றும் தாராபுரம் இயற்கை உழவர்கள் கூட்டமைப்பு ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
விழாவில், அவிநாசி தீரன் கலைக்குழுவின் கம்பத்து ஆட்டம், நிமிர்வு கலைக்குழுவின் பறை இசை ஆகியவை நடந்தன. தைத்திருநாளை வரவேற்கும் விதமாகவும், இயற்கை சார்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், முன்னோர்கள் பயன்படுத்திய பாரம்பரிய பொருட்கள், இசைக்கருவிகள், ஆயுதங்கள் உள்ளிட்ட பலவும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மேலும், நாட்டு மாடுகள், காளைகள், குதிரை, ஆட்டுக்கிடா, உழவு சார்ந்த பொருட்கள், கல்வெட்டுகள், நடுகல் உள்ளிட்டவை குறித்த கண்காட்சியும் இடம்பெற்றிருந்தன.