/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பேரூராட்சிகளில் வேலை உறுதி திட்டம் என்னாச்சுங்க! செயல்படுத்த ஆர்வம் காட்டாத தமிழக அரசு
/
பேரூராட்சிகளில் வேலை உறுதி திட்டம் என்னாச்சுங்க! செயல்படுத்த ஆர்வம் காட்டாத தமிழக அரசு
பேரூராட்சிகளில் வேலை உறுதி திட்டம் என்னாச்சுங்க! செயல்படுத்த ஆர்வம் காட்டாத தமிழக அரசு
பேரூராட்சிகளில் வேலை உறுதி திட்டம் என்னாச்சுங்க! செயல்படுத்த ஆர்வம் காட்டாத தமிழக அரசு
ADDED : மே 15, 2025 11:27 PM

உடுமலை: ஊராட்சிகளில் செயல்பாட்டிலுள்ள, தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் போல, பேரூராட்சிகளிலும் நகர்ப்புற வேலை உறுதி திட்டம், 2022ல், அறிமுகப்படுத்தப்பட்டு, கைவிடப்பட்டுள்ளது. இதனால், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்றி பாதித்து வருகின்றனர்.
தமிழகத்திலுள்ள பேரூராட்சிகள் உட்பட நகர்ப்புறங்களில், வசிக்கும் பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள மக்களின் வாழ்வதாரத்துக்காக சிறப்பு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு தீர்மானித்தது.
இதற்காக, 'கொரோனா' பேரிடர் காலத்தில், முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரங்கராஜன் தலைமையில் உயர்மட்ட பொருளாதார மேம்பாட்டு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவினர், பேரூராட்சிகள் உட்பட நகர்ப்புறங்களில் வசிக்கும் தொழிலாளர்களுக்கும், ஊராட்சிகளை போல, வேலை உறுதி திட்டத்தை செயல்படுத்த அரசுக்கு பரிந்துரைத்தனர்.
'நகர்ப்புற வேலை உறுதி திட்டம்' என்ற பெயரில் முதற்கட்டமாக, கடந்த, 2022ல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் - உத்திரமேரூர், செங்கல்பட்டு - -எடைக்காழிநாடு, திருவள்ளூர்- - பொதட்டூர்பேட்டை, வேலூர் - பள்ளிகொண்டா, திருப்பத்தூர் -- ஆலங்காயம், ராணிப்பேட்டை- - நெமிலி, திருவண்ணாமலை- - போளூர், திருப்பூர் மாவட்டம் - குமரலிங்கம் ஆகிய பேரூராட்சிகளில், இத்திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
விவசாயத்தில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய நீர்நிலைகள் நிறைந்த பேரூராட்சியை தேர்வு செய்து, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
பேரூராட்சிகளில், தொழிலாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, அடையாள மற்றும் பணி அட்டை வழங்கி, சில வாரங்கள் வேலையும் வழங்கப்பட்டது.
இரண்டாம் கட்டமாக, தமிழகத்திலுள்ள, 37 பேரூராட்சிகளுக்கு திட்டம் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திட்டம் தற்போது செயல்பாட்டில் இல்லை. நிதி ஒதுக்கீடு செய்யாதது உள்ளிட்ட காரணங்களால், திட்டம் முடங்கியுள்ளது.
உடுமலை பகுதியிலுள்ள, தளி, கணியூர், சங்கராமநல்லுார், மடத்துக்குளம் ஆகிய பேரூராட்சிகள், விவசாயம் சார்ந்த பகுதியாக உள்ளது. அங்கு வசிக்கும் தொழிலாளர்களுக்கு பெரும்பாலான நாட்கள் வேலைவாய்ப்பு இருப்பதில்லை.
எனவே, நகர்ப்புற வேலை உறுதி திட்டத்தை தங்கள் பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ஆர்வம் காட்டாததால், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்றி பாதித்துள்ளனர்.
இத்திட்டத்தின் நிலை குறித்தும், நிதி ஒதுக்கீடு குறித்தும், அரசு தரப்பில் எவ்வித விளக்கமும் தரப்படவில்லை. இதனால், பேரூராட்சி நிர்வாகத்தினரும் குழப்பத்தில் உள்ளனர்.
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட செயலாளர் பஞ்சலிங்கம் கூறுகையில், ''திருப்பூர் மாவட்டத்தில் குமரலிங்கம் பேரூராட்சியில், நகர்ப்புற வேலை உறுதி திட்டத்தின் கீழ், தொழிலாளர்களை தேர்வு செய்து, பணி அட்டை வழங்கினர்.
ஆனால், தொழிலாளர்களுக்கு இரண்டு ஆண்டுகளாக வேலை வழங்கவில்லை. இந்தாண்டு நிதி ஒதுக்கீடு செய்து, தொழிலாளர்களுக்கு தமிழக அரசு வேலை வழங்க வேண்டும்,'' என்றார்.