/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தெக்கலுார் மீது அப்படி என்ன வெறுப்பு?
/
தெக்கலுார் மீது அப்படி என்ன வெறுப்பு?
ADDED : நவ 09, 2025 12:22 AM

அவிநாசி: தெக்கலுாரை சேர்ந்த கல்லுாரி மாணவி ஒருவர், கோவை கே.எம்.சி.எச்., பஸ் ஸ்டாப்பில் இருந்து நேற்றுமுன்தினம் தெக்கலுார் செல்ல திருப்பூர் செல்லும் கே.எம்.எஸ். என்ற தனியார் பஸ்சில் ஏறினார்.
நடத்துனர், தெக்கலுாரில் நிற்காது என்று கூறியதோடு, மாணவியை ஒருமையில் திட்டி, சின்னியம்பாளையம் ஸ்டாப்பில் இறக்கிவிட்டுள்ளார். இதேபோல், தெக்கலுாரை சேர்ந்த மற்றொரு மாணவி, பி.எஸ்.ஜி. ஸ்டாப்பில் இருந்து ஏ.எஸ்.எம். என்ற திருப்பூர் செல்லும் தனியார் பஸ்சில் ஏறியுள்ளார். 'கருமத்தம்பட்டி, தெக்கலுார், அவிநாசி ஸ்டாப்புக்கு பஸ் போகாது' என்று கூறி, அவிநாசிலிங்கம்பாளையம் ஸ்டாப்பில் மாணவியை இறக்கிவிட்டுள்ளார்.
இது குறித்து, இரு மாணவியரும் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதையறிந்த தெக்கலுார் பொதுமக்கள் நேற்று பைபாஸ் வழியாக கோவை செல்லும் தனியார் பஸ்களை சிறை பிடிப்பதற்காக முயன்றனர். அவிநாசி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வனிதா, எஸ். ஐ. லோகநாதன், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் குமரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொடர்ந்து, வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் குமரன் தெக்கலுார் ஸ்டாப் செல்லாமல், பைபாஸ் வழியாக சென்ற மூன்று பஸ் உரிமையாளர்களுக்கு, தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். ஆனால், மதியம் முதலே மீண்டும் தெக்கலுார் ஸ்டாப் வழியாக செல்லாமல் பைபாஸில் தனியார் பஸ்கள் சென்றன. ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெக்கலுார் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் கூடினர்.
இதையறிந்த போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா, எஸ்.ஐ., லோகநாதன், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் குமரன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தெக்கலுார் ஸ்டாப் வராத பஸ்கள் குறித்த ஆர்.டி.ஓவிடம் அறிக்கை தரப்பட்டு, கலெக்டரிடம் மேல் நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.
இதனை ஏற்க மறுத்த மக்கள், 'எங்கள் ஊர் மீது பஸ் ஊழியர்களுக்கு அப்படி என்ன வெறுப்பு? இதற்கு முடிவு தெரியும் வரை இப்பிரச்னையை விட மாட்டடோம். ஆர்.டி.ஓ. வந்து பேச வேண்டும்,' என்று ஆவேசமாக கூறினர். அதனை தொடர்ந்து, அவிநாசி இன்ஸ்பெக்டர் ராஜபிரபு, தெக்கலுாருக்கு சென்று பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன்படி, கலெக்டர் அலுவலகத்தில் நாளை நடைபெற உள்ள குறைதீர் முகாமில், தெக்கலுார் ஸ்டாப் வராத பஸ்களின் வழித்தட உரிமத்தை ரத்து செய்தல், உரிய நேரத்தில் வழித்தடத்தில் பஸ்களை இயக்குதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்க உள்ளதாக தெக்கலுார் பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

