/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நீர் நிலைகள் துார்வாரும் திட்டம் என்னாச்சு! உடனடியாக துவக்க வலியுறுத்தல்
/
நீர் நிலைகள் துார்வாரும் திட்டம் என்னாச்சு! உடனடியாக துவக்க வலியுறுத்தல்
நீர் நிலைகள் துார்வாரும் திட்டம் என்னாச்சு! உடனடியாக துவக்க வலியுறுத்தல்
நீர் நிலைகள் துார்வாரும் திட்டம் என்னாச்சு! உடனடியாக துவக்க வலியுறுத்தல்
ADDED : ஏப் 14, 2025 10:00 PM
உடுமலை, ;நீர் நிலைகளை ஆழப்படுத்தி, பருவமழை நீரை சேமிக்கும் வகையில்,விவசாயிகள் வண்டல் மண் எடுத்துக்கொள்ளும் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்திலுள்ள குளம், குட்டைகள், ஏரிகள் மற்றும் அணைகளில், பருவமழை காலங்களில் கிடைக்கும் நீரை சேமிக்கும் வகையிலும், விவசாய நிலங்களை வளப்படுத்தும் வகையிலும், விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுத்துக்கொள்ளும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ஆண்டு தோறும் கோடை காலங்களில், நீர் நிலைகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அனுமதிக்கப்படும் வண்டல் மண் குறித்து, மாவட்ட அளவில் அறிவிக்கப்படும். விவசாயிகளுக்கு தாலுகா அலுவலகங்களில் விண்ணப்பங்கள் அடிப்படையில் அனுமதியளிக்கப்பட்டது.
கடந்தாண்டு, ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்து, வருவாய்த்துறை, வேளாண் துறை பரிந்துரை அடிப்படையில் அனுமதியளிக்கப்பட்டது. நடப்பாண்டு கோடை காலம் முன்னதாகவே துவங்கி, தற்போது வறட்சி நிலை காணப்படுகிறது.
கிராமங்களிலுள்ள குளம், குட்டைகள் வறண்டும், ஏரிகள், அணைகளில் நீர் இருப்பு குறைந்துள்ள நிலையில், உடனடியாக மாவட்ட நிர்வாகங்கள் வாயிலாக, விவசாயிகளுக்கு அனுமதி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
விவசாயிகள் கூறியதாவது:
விவசாயிகள் தங்கள் பகுதிக்கு அருகிலுள்ள நீர் நிலைகளில் வண்டல் மண் எடுத்துக்கொள்ளவும், நீர் நிலைகளை ஆழப்படுத்தி, பருவமழையின் போது நீரை சேமிக்கும் வகையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தற்போது, பெரும்பாலான நீர் நிலைகள் வறண்டுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகங்கள் வாயிலாக, துார்வார வேண்டிய குளம், குட்டை உள்ளிட்ட நீர் நிலைகள் பட்டியல் வெளியிடவும், விவசாயிகள் விண்ணப்பிக்கும் வகையில், ஆன்லைன் விண்ணப்ப முறையை துவக்க வேண்டும்.
ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்புள்ளதால், உடனடியாக இப்பணிகளை மாவட்ட கலெக்டர்கள் துவக்க, அரசு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.