ADDED : மார் 09, 2026 05:39 AM

பல்லடம்: ''மென்மையோடு, தன்மையும் இருப்பவர்களால்தான் திறமையை வளர்த்துக் கொள்ள முடியும்'' என்று மகளிர் தின விழாவில் கூறப்பட்டது.
பல்லடம் அருகே, காரணம்பேட்டை, சங்கோதிபாளையம் கிராமத்தில் உள்ள மகிழ்வனம் தாவரவியல் பூங்காவில், மகளிர் தின விழா மற்றும் வாழும் கலை பயிற்சி மைய துவக்க விழா ஆகியவை நடந்தன. கோடங்கிபாளையம் முன்னாள் ஊராட்சி தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். வாழும் கலை ஒருங்கிணைப்பாளர் சசிகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு வாழும் கலை ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார் பேசுகையில், 'திறமை உள்ளவர்களிடம் மென்மையும், தன்மையும் இருப்பதில்லை.
மென்மையோடு, தன்மையும் இருப்பவர்களால்தான் திறமையை வளர்த்துக் கொள்ள முடியும். நல்லது செய்வதற்கும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று ஸ்ரீஸ்ரீரவிசங்கர்ஜி கூறுவார்.
நாம் இந்த உலகத்தை விட்டுப் போகும்போது, இந்த சமுதாயத்தில் இரண்டு கேள்விகள் எழும். இந்தப் பிரபஞ்சத்தின் மூலம் எவ்வளவு ஞானம் பெற்றுள்ளோம்; எவ்வளவு சேவைகள் செய்திருக்கிறோம் என்ற இரண்டு கேள்விகள்தான் எழும்.
மற்ற அனைத்தும் அற்ப சந்தோஷங்களே. குரு என்பவர் அனைத்து தகுதிகளையும், திறமைகளையும் நமக்கு கற்றுக் கொடுத்து நம்மை வளர்க்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, மகளிர் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன. தொடர்ந்து, வாழும் கலை பயிற்சி மைய துவக்க விழா நடந்தது. மகளிர் தினச் சிறப்பு குறித்து, வழக்கறிஞர் நித்திய பிரியா சிறப்புரை ஆற்றினார்.
மகிழ்வனம் நிர்வாகிகள் பூபதி, உதயகுமார் ஆகியோர் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர்.
