/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அமெரிக்காவின் நெருக்கடிகளுக்கு அஞ்சிடோம்; விவசாய சங்கத்தினர், தொழில்துறையினர் கணீர்
/
அமெரிக்காவின் நெருக்கடிகளுக்கு அஞ்சிடோம்; விவசாய சங்கத்தினர், தொழில்துறையினர் கணீர்
அமெரிக்காவின் நெருக்கடிகளுக்கு அஞ்சிடோம்; விவசாய சங்கத்தினர், தொழில்துறையினர் கணீர்
அமெரிக்காவின் நெருக்கடிகளுக்கு அஞ்சிடோம்; விவசாய சங்கத்தினர், தொழில்துறையினர் கணீர்
UPDATED : ஆக 10, 2025 08:27 AM
ADDED : ஆக 09, 2025 11:46 PM

அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீது, 50 சதவீத வரி விதித்துள்ளார். ''இந்திய விவசாயிகள், மீனவர்கள், பால் உற்பத்தியாளர்கள் நலனை பாதுகாத்தே தீருவோம். அதற்காக எத்தகைய விலை கொடுக்க வேண்டி இருந்தாலும், அதற்கு இந்தியா தயாராக இருக்கிறது'' என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமரின் இந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மையை காப்போம் என்றும், விவசாயிகள், தொழில்துறையினர் உறுதி அளித்துள்ளனர்.
புதிய சந்தை வேண்டும்
---
வெற்றி (செயல் தலைவர், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்): தமிழகத்தில் இருந்து பருத்தி, மிளகு, மஞ்சள், தேயிலை, மசாலா உள்ளிட்ட பயிர்கள் அமெரிக்காவுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அமெரிக்காவின் இந்த மிரட்டல் தொடராமல் இருக்க, அந்நாட்டு சந்தைக்கு மாற்றாக, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் புதிய ஏற்றுமதி சந்தைகளை உருவாக்க வேண்டும். அமெரிக்காவின் வரி விதிப்பால், இதர தொழில்கள் பாதிக்கப்படாமல் இருக்க, பேச்சுவார்த்தையில் சமூகத் தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.
ஒருபோதும் வீழோம்
--------------------------
செல்லமுத்து (மாநில தலைவர், உழைப்பாளர் கட்சி):
ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கை குறித்து, உலகின், 192 நாடுகளும் வரவேற்றுள்ளன. உலக நாடுகள் இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு வரவேற்பு அளிக்கும்போது, அமெரிக்க அதிபர் டிரம்ப், கோமாளி வேலையை செய்து வருகிறார். ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் இந்தியாவுடன் சேரும்போது, அமெரிக்கா அடங்கி ஒடுங்கி வேண்டிய சூழல் உருவாகும். இந்த வரி விதிப்பு என்பது, தற்காலிகமாக சில பாதிப்புகளை ஏற்படுத்துமே தவிர, ராணுவ வலிமை கொண்ட இந்தியாவின் பொருளாதாரம் ஒரு போதும் வீழ்ச்சி பெறாது. மத்திய அரசு எடுக்கும் முடிவுக்கு விவசாயிகளின் ஆதரவு எப்போதும் முழுமையாக இருக்கும்.
அச்சம் எதற்கு?
-----
ஈஸ்வரன் (நொய்யல் ஆறு நன்னீருக்கான இயக்க ஒருங்கிணைப்பாளர்):
வரிவிதிப்பு மூலம் டிரம்ப், இந்தியாவை மிரட்டுவது ஏற்புடையதல்ல. எந்த சூழலிலும் எனது நிலைப்பாட்டில் இருந்து மாற மாட்டேன். இந்திய விவசாயிகளை காப்பாற்ற வேண்டியது எனது கடமை என, துணிச்சலுடன் பிரதமர் கூறியது பெருமிதமாக உள்ளது. தேவைக்கு அதிகமாகவே, உணவு உற்பத்தி செய்து தர விவசாயிகள் தயாராக உள்ள போது, அன்னிய நாட்டைக் கொண்டு நாம் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. இந்தியாவில் உணவு பஞ்சம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்திய விவசாயிகள், பொதுமக்கள் நம்பிக்கையில், பிரதமர் எடுத்துள்ள துணிச்சலான முடிவை வரவேற்கிறோம்.
எல்லா வளமும் உள்ளது
---------------------
திருஞானசம்பந்தம் (ஒருங்கிணைப்பாளர், நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்):
இந்தியாவில், உழைப்பு என்ற மிகப்பெரும் ஆயுதம் உள்ளதால், யாரும் அச்சப்படத் தேவையில்லை. எல்லா வளமும் நமது நாட்டில் உள்ள நிலையில், நாம், யாரை சார்ந்து இருக்க வேண்டும்? நதிநீர் இணைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, விவசாயத்தை மேம்படுத்துவதன் மூலம், யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. பிரதமர் எடுத்த நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை.
உற்பத்தி பெருகட்டும்
-------------------------
சுரேஷ் (மாநிலத் தலைவர், ஏர்முனை இளைஞர் அணி):
மத்திய அரசு, உள்ளூர் விவசாயிகளின் உற்பத்தி போகவே, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும். வெளிநாடுகளுக்கு அதிக சலுகைகள் கொடுத்து இறக்குமதி செய்வதை தவிர்க்க வேண்டும். இதன் வாயிலாக, விவசாயிகள் உற்பத்தியை பெருக்கி, மற்ற நாடுகளை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது.