ADDED : டிச 04, 2025 08:06 AM
திருமூர்த்தி அணையிலிருந்து கடைமடையான வெள்ளகோவில் வரை, 124 கி.மீ., துாரம் அமைந்துள்ள பி.ஏ.பி. பிரதான கால்வாய் பல இடங்களில் வலுவிழந்து காணப்படுகிறது; கிளைக்கால்வாயும் சேதமடைந்துள்ளது. கால்வாயை தாங்கிப்பிடிக்கும் கான்கிரீட் கரைகள் சரிந்து, மண் சரிவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது.
நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு, கால்வாயில் நீர் திறந்து விடப்படும் நிலையில், ஒவ்வொரு மண்டல பாசனத்தின் போதும், பிரதான கால்வாய் உடைந்திருந்தால் நீர் விரயமாகிறது என, விவசாயிகள் கூறி வருகின்றனர். கடந்த, ஆக., மாதம் உடுமலைக்கு வந்த முதல்வர் ஸ்டாலின், 'பி.ஏ.பி., விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, கால்வாய் துார் வார, 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்' என அறிவித்தார்.
விவசாயிகள் கூறியதாவது:
கடந்த ஆக., மாதம், உடுமலைக்கு வந்த முதல்வரிடம், திருமூர்த்தி அணை நீர்த்தேக்க திட்ட குழு, பகிர்மான குழு சார்பில், பி.ஏ.பி., பாசனம் குறித்து மனு கொடுக்கப்பட்டது. அதில், மண்டல பாசன காலம் துவங்கும் முன்பே, கால்வாய்களை துார்வார வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
அதனடிப்படையில், அரசு விழா மேடையில், கால்வாய் துார் வாரும் பணிக்கு, 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என, முதல்வர் அறிவித்தார்.ஆனால், அதற்கான அரசாணை இன்னும் பிறப்பிக்கப்படவில்லை. அடுத்த மாதம் துவங்கி, முதல் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில், கால்வாய் பராமரிப்பு மற்றும் துார் வாரும் பணியை, விரைவில் துவக்க வேண்டும். டெல்டா மாவட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது போன்று, ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நிதி ஒதுக்க வேண்டும் எனவும், முதல்வரிடம் வலியுறுத்த உள்ளோம்.

