/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பின்னலாடை தொழிலாளர் சம்பள பேச்சு எப்போது?
/
பின்னலாடை தொழிலாளர் சம்பள பேச்சு எப்போது?
ADDED : நவ 03, 2025 02:06 AM
திருப்பூர்:திருப்பூரில், 1,500க்கும் அதிகமான ஏற்றுமதி நிறுவனங்கள், 2,500க்கும் அதிகமான உள்நாட்டு பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், 350க்கும் அதிகமான சாய ஆலைகள், 400க்கும் அதிகமான நிட்டிங் நிறுவனங்கள், 250க்கும் அதிகமான பிரின்டிங் நிறுவனங்கள் என, ஆயிரக்கணக்கான குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
பின்னலாடை தொழிலில், தமிழகத்தின் அனைத்து மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்களும், 19 வெளி மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களும் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர். பின்னலாடை தொழிலாளர்களுக்கு, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள் சங்கங்கள் சார்பில், 2021ல், 32 சதவீத சம்பள உயர்வு வழங்கிய ஒப்பந்தம், கடந்த செப்., 30ம் தேதியுடன் காலாவதியானது. அதற்கு முன்பே பேச்சுவார்த்தையை துவக்கி, விரைவாக சம்பள உயர்வு வழங்க, தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வந்தன. எதிர்பாராத வகையில் அமெரிக்க வரி உயர்வு பிரச்னை எழுந்தது; தீபாவளி போனஸ் பட்டுவாடா செய்யப்பட்டது. இதனால் தொழிற்சங்கங்கள் தொழில் அமைப்புகுளுக்கு அழுத்தம் கொடுப்பதைத் தவிர்த்தன.
தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில், கடந்த வாரம், உற்பத்தியாளர் சங்கங்களுக்கு நினைவூட்டல் கடிதம் வழங்கப்பட்டது. அதன்படி, தொழில் அமைப்புகளின் செயற்குழு கூடி, இதுதொடர்பாக விவாதிக்க உள்ளதாகவும், பேச்சுவார்த்தையை துவக்குவது குறித்து முடிவு செய்யப்படும் எனவும், தொழில் அமைப்புகள் தரப்பு தெரிவித்துள்ளது.
150 சதவீதம் உயர்வு தேவை
தொழிற்சங்க கூட்டுக்குழு அமைத்து, பின்னலாடை தொழிலாளர் சம்பள உயர்வு தொடர்பான கோரிக்கையை முன்வைத்துள்ளன. விலைவாசி உயர்வை சமாளிக்கும் வகையில், 150 சதவீத சம்பள உயர்வு, மாதாந்திர பஞ்சப்படியாக, 3000 ரூபாய், பயணப்படி, 30 ரூபாய், வீட்டு வாடகை படி, 3000 ரூபாய் வழங்க வேண்டும்; 'ஓவர்டைம்'வேலைக்கான சம்பளத்தையும், 100 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் பிரதானமாக இடம்பெற்றுள்ளன.
பேச்சுவார்த்தை குழு அமைகிறது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,' அக்., 25ம் தேதி அனுப்பிய கடிதம் கிடைத்ததும், 29ம் தேதி ஏற்றுமதியாளர்கள் சங்க செயற்குழு கூடி ஆலோசித்தது. அதன்படி, தொழிலாளர் சம்பள உயர்வு பேச்சுவார்த்தைக்கு தயாராகும் வகையில், மற்ற தொழில் அமைப்புகளை அழைத்து பேசி, பேச்சுவார்த்தைக்கான குழு அமைக்கப்படும். குழு அமைத்த பிறகு, பேச்சுவார்த்தைக்கான தேதி அறிவிக்கப்படும்,' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

