பழங்கால கோவில்களின் புனரமைப்பு பணி... எப்போது முடியும்? நீண்ட இழுபறியால் மக்களிடையே அதிருப்தி
பழங்கால கோவில்களின் புனரமைப்பு பணி... எப்போது முடியும்? நீண்ட இழுபறியால் மக்களிடையே அதிருப்தி
UPDATED : ஜூன் 23, 2026 06:22 PM
ADDED : ஜூன் 23, 2026 05:11 PM

உடுமலை: கொழுமம் கரிவரதராஜ பெருமாள் கோவில் உட்பட பழமை வாய்ந்த கோவில் புனரமைப்பு பணிகள் துவங்கி, பல ஆண்டுகளாகியும் பணிகள் நிறைவு பெறாமல் இழுபறியாகியுள்ளது; விரைவில் இக்கோவில்களுக்கு கும்பாபிேஷகம் நடத்த, ஹிந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதியில், அமராவதி மற்றும் உப்பாறு படுகை எனப்படும் பகுதிகளில், பழமை வாய்ந்த கோவில்கள் அதிகளவு உள்ளன.
ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில்கள், போதிய பராமரிப்பு இல்லாமல் பொலிவிழந்து வருகிறது.
இதில் குமரலிங்கம், கொழுமம் ஆற்றுப்பாலம் அருகே உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவில், பல நுாற்றாண்டுகளுக்கு முற்பட்டதாகும்.
கருவறையை சுற்றிலும் அகழி போன்ற அமைப்பு என, பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய இந்த கோவில், பராமரிப்பு இல்லாமல் பூட்டப்பட்டிருந்தது. கடந்த, 2015ல், ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளால் கோவில் திறக்கப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ரூ.35 லட்சம் ஒதுக்கீடு கோவிலை புனரமைக்க, தொல்லியல் துறை கருத்துரு பெறப்பட்டு, நிதி ஒதுக்கீட்டுக்காக அரசுக்கு அதிகாரிகள் கருத்துரு அனுப்பினர். முதற்கட்டமாக, கடந்த 2013ல், கோவில் புனரமைப்புக்கு, 35 லட்சம் ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்தது.
சில ஆண்டுகள் இழுபறிக்குப்பிறகு, பணிகள் துவங்கி, இதுவரை பணிகள் நிறைவு பெறவில்லை.
அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள, பழமையான கோவில்களில் ஒன்றான கரிவரதராஜ பெருமாள் கோவில் முழுமையாக புனரமைக்கப்பட்டு, கும்பாபிேஷகம் நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு அப்பகுதி மக்களிடையே உள்ளது.
ஆனால், பல ஆண்டுகளாக பணிகள் இழுபறியாகியுள்ளதால், அவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இதே போல், சோமவாரப்பட்டி கண்டியம்மன் கோவில் திருப்பணிகள், சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோட்டமங்கலம் வல்லகொண்டம்மன் கோவில் புனரமைப்பு பணிகளை துவக்க, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளால், இரண்டு ஆண்டுகளுக்கு முன் பூஜைகள் நடத்தப்பட்டது.
இதுவரை எவ்வித பணிகளும் மேற்கொள்ளப்படாமல், கோவில் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியுள்ளது.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதியில், நுாற்றாண்டுகளுக்கு முற்பட்ட கோவில்கள் கண்டறியப்பட்டு, அங்கு அடிப்படை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவும் கடந்தாண்டு கருத்துரு அனுப்பபட்டது.
உதாரணமாக, கொங்கலக்குறிச்சி செல்லாண்டியம்மன் கோவிலில், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் இதுவரை துவங்கவில்லை.
தொன்மை வாய்ந்த கோவில்களில், நீண்ட காலமாக புனரமைப்பு மற்றும் திருப்பணிகள் மேற்கொள்ளாமல் இருப்பது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
பழங்காலத்தின் தொன்மையையும், வரலாற்று சிறப்புகளுக்கு அடையாளமான இக்கோவில்களை தொன்மை மாறாமல் விரைவில் புதுப்பித்து, கும்பாபிேஷகம் நடத்த வேண்டும்.
இது குறித்து, ஹிந்து சமய அறநிலையத்துறை வாயிலாக, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
