ஆக்கிரமிப்பால் சுருங்கும் ராஜவாய்க்கால் மீட்பது எப்போது ?
ஆக்கிரமிப்பால் சுருங்கும் ராஜவாய்க்கால் மீட்பது எப்போது ?
ADDED : மே 14, 2026 06:29 AM
உடுமலை: பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களின் நிலத்தடி நீராதாரமாகவும், ஏழு குளங்களின் உபரி நீர் வெளியேறும் வடிகாலாகவும் இருந்த ராஜவாய்க்கால் பள்ளம், துார்வாரப்படாமல், புதர் மண்டி ஆக்கிரமிப்புகளால், காணாமல் போய் வருகிறது.
உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலையிலிருந்து உருவாகும் மழை நீர் ஓடைகளை தடுத்து, மழைக்காலத்தில் கிடைக்கும் தண்ணீரை தேக்கி வைக்க, ஏழு குளங்கள் ஏற்படுத்தப்பட்டன.
இக்குளங்களில், இறுதியாக அமைந்துள்ள ஒட்டுக்குளத்தில் இருந்து, உபரி நீர் ராஜவாய்க்கால் பள்ளத்தின் வழியாக வெளியேற்றப்படும்.
மழைக்காலத்தில், இந்த பள்ளத்துடன் பல கிராமங்களில் இருந்து வெளியேறும் மழை நீரும் சேர்ந்து, குறிஞ்சேரி வழியாக உப்பாறு ஓடையுடன் இணைகிறது.
ராஜவாய்க்கால் பள்ளம் பல மாதங்கள் நீரோட்டம் இருந்த போது, பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களுக்கு நிலத்தடி நீராதாரமாக இருந்தது. தற்போது இந்த பள்ளம், பராமரிப்பின்றி, துார்வாரப்படாமல், புதர் மண்டி ஆக்கிரமிப்பால் சுருங்கியுள்ளது.
மேலும், நகரில் இருந்து வரும் கழிவு நீரும், ஏரிப்பாளையம் அருகே, இந்த பள்ளத்துடன் இணைந்து, குறிஞ்சேரி செல்லும் போது, கழிவு நீர் வாய்க்காலாக மாறி விடுகிறது.
முக்கியத்துவம் வாய்ந்த, இந்த பள்ளத்தை துார்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுப்பணித்துறைக்கு, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கடந்த, 2014ல், மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்த தொடர் மழையால், ஒட்டுக்குளம் நிரம்பி, ராஜவாய்க்கால் பள்ளம் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால், குளம் பாதுகாக்கப்பட்டது.
எனவே, குறிஞ்சேரியிலிருந்து ஒட்டுக்குளம் வரை, ராஜவாய்க்கால் பள்ளத்தின் நீரோட்ட பாதையை கண்டறிந்து, முழுவதுமாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்; மழைக்காலத்தில், மீண்டும் நீரோட்டம் இருக்கும் வகையில், துார் வார வேண்டும் என தன்னார்வ அமைப்புகள் சார்பில், தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
