UPDATED : செப் 24, 2026 10:10 PM
ADDED : செப் 24, 2026 08:30 PM
திருப்பூர்:மாவட்டத்தில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கூடுதல் ஆம்புலன்ஸ்களை விரைந்து ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள டி.எம்.சி. அலுவலகத்தில் 6 ஆம்புலன்ஸ், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையான காங்கயத்தில் 3 ஆம்புலன்ஸ்களும் உட்பட மாவட்டம் முழுவதும் 32 அவசர சிகிச்சை 108 ஆம்புலன்ஸ்கள் பல்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், திருப்பூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் 67 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த 10 நாட்களில் மட்டும் 35 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அறிகுறிகள் தென்பட்டதும் பொதுமக்கள் உடனடியாக மருத்துவமனையை அணுகி சிகிச்சை பெற்றதால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக பொதுசுகாதாரத்துறை சார்பில் தொடர்ந்து வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
கிடைக்குமா?
உடல்நல பாதிப்பு ஏற்பட்டால் பெரும்பாலானோர் 108 ஆம்புலன்ஸ் சேவையை நாடுகின்றனர். மாவட்டத்தில் உள்ள 32 ஆம்புலன்ஸ்களில் 2 குழந்தைகளுக்கானவை என்பதுடன், ஒரு பைக் ஆம்புலன்ஸூம் உள்ளது. மீதமுள்ள 29ல், தேவைக்கு போதுமானதாக இருப்பதில்லை. கோவை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு மருத்துவமனைக்கு தினமும், 8 ஆம்புலன்ஸ்கள் வரை சென்று திரும்புவதால், அவசரமான நேரங்களில் திருப்பூர் மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இதனால், நிலையை சமாளிக்க கூடுதலாக 2 -- 4 ஆம்புலன்ஸ் வாகனம் தேவை என கருத்துரு தயாரிக்கப்பட்டு கடந்த ஜூனில் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், மூன்று மாதங்கள் கடந்தும் ஒதுக்கப்படவில்லை. தற்போது டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் இணைநோய் உள்ளவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடி மருத்துவ உதவி தேவைப்படுகிறது. எனவே, மாவட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு திருப்பூர் மாவட்டத்துக்கு கூடுதல் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை விரைந்து ஒதுக்க வேண்டும்.
