/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பூங்கா பணியை எப்ப சார் முடிப்பீங்க! ஆண்டுக்கணக்கில் இழுபறியாகும் அவலம்; தொடரும் அதிகாரிகளின் அலட்சியம்
/
பூங்கா பணியை எப்ப சார் முடிப்பீங்க! ஆண்டுக்கணக்கில் இழுபறியாகும் அவலம்; தொடரும் அதிகாரிகளின் அலட்சியம்
பூங்கா பணியை எப்ப சார் முடிப்பீங்க! ஆண்டுக்கணக்கில் இழுபறியாகும் அவலம்; தொடரும் அதிகாரிகளின் அலட்சியம்
பூங்கா பணியை எப்ப சார் முடிப்பீங்க! ஆண்டுக்கணக்கில் இழுபறியாகும் அவலம்; தொடரும் அதிகாரிகளின் அலட்சியம்
ADDED : ஜன 10, 2025 12:18 AM

உடுமலை; உடுமலை நகராாட்சி அண்ணா பூங்கா புதுப்பிக்கும் பணி பல ஆண்டுகளாக இழுபறியாகி வருகிறது. புதிதாக அமைக்கப்பட்ட கட்டமைப்புகளும் சிதிலமடைந்து, புதர் மண்டியும், சமூக விரோத செயல்கள் அரங்கேறும் மையமாக மாறியுள்ளது.
உடுமலை நகராட்சியில், முதல் பொழுது போக்கு அம்சமாக, நுாறு ஆண்டுகளுக்கு முன், பெரிய அளவில் பூங்கா அமைக்கப்பட்டது.
இங்கு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்ட 'ரேடியோ ரூம்', நுால்கள் படிக்க 'ரீடிங் ரூம்' என பல்வேறு அம்சங்களுடன் காணப்பட்டது. அரசு கட்டடங்கள், ஆக்கிரமிப்பு காரணமாக, குறுகிய பூங்காவுக்கு, அண்ணா பூங்கா என பெயரிடப்பட்டுள்ளது.
பூங்காவை சுற்றிலும், நகராட்சி பள்ளி, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா, அரசு மேல்நிலைப்பள்ளி, வணிக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனை என மக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதியாக உள்ளது.
பசுமை சூழ்ந்து காணப்பட்ட பெரிய அளவிலான மரங்கள், நடை பாதை, நீரூற்று, அழகான இருக்கைகள், சிறுவர்களுக்கு என விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய பூங்கா அமைந்திருந்தது. உடுமலை மக்களுக்கு ஒரே பொழுது போக்கு அம்சமாக இருந்த நிலையில், தொடர் பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்து காணப்பட்டது.
ஆட்சி மாற்றங்கள், நகர மன்றம் நிர்வாக மாற்றங்களின் போது, ஒவ்வொரு முறையும் , கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து, பூங்கா புதுப்பிக்கப்படுவதும், தொடர்ந்து பராமரிக்காமல் வீணாவதும் தொடர் கதையாக உள்ளது.
இது வரை பல கோடி ரூபாய் செலவில் புதுப்பித்தும், மக்களுக்கு பயனில்லாத நிலையே தொடர்கிறது.
இந்நிலையில், நான்கு ஆண்டுக்கு முன், நகராட்சி நுாற்றாண்டு விழா சிறப்பு நிதியின் கீழ், ரூ.1.42 கோடி செலவில், பூங்காவை புதுப்பிக்க நிதி ஒதுக்கப்பட்டது.
ஏற்கனவே இருந்த பெரும்பாலான கட்டமைப்புகள் உடைக்கப்பட்டும், மரங்கள் வெட்டப்பட்டும் பல்வேறு புதுப்பிக்கும் பணிகள் துவங்கின. அதிகாரிகள் அலட்சியம் காரணமாகவும், டெண்டர் காலக்கெடு முடிந்தும், புதுப்பிக்கும் பணி முடிக்காமல் இழுபறியாகி வருகிறது. நுாற்றாண்டு விழா சிறப்பு நிதியின் கீழ், பூங்காவில் அமைக்கப்பட்ட கட்டமைப்புகளும் தற்போது சிதிலமடைந்து வருகிறது.
இதனால், பூங்கா முழுவதும் புதர் மண்டி காணப்படுவதோடு, சமூக விரோத செயல்கள் நடக்கும் மையமாகவும், கஞ்சா, போதை ஊசி ஆசாமிகள் புகலிடமாக மாறியுள்ளது.
மேலும், அருகிலுள்ள டாஸ்மாக் கடையிலிருந்து, மது பானங்கள் வாங்கி வரும், 'குடி' மகன்கள் பூங்காவில் அமர்ந்து, மது அருந்தும் மையமாகவும் மாறியுள்ளது.
இதே போல், நகராட்சி பகுதிகளில், பூங்கா புதுப்பிக்கும் பணி உள்ளிட்ட வளர்ச்சி பணிகள், குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்காமல், இழுபறியாகி வருகிறது. இதனை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளும் கண்டு கொள்ளாததால், மக்கள் பாதித்து வருகின்றனர்.