/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாணவ சமுதாயம் எங்கே செல்கிறது?
/
மாணவ சமுதாயம் எங்கே செல்கிறது?
ADDED : நவ 23, 2025 07:02 AM
தி ருப்பூரில் உள்ள ஒரு மாநகராட்சி பள்ளியை சேர்ந்த மேல்நிலை வகுப்பு மாணவர்கள் சில நாட்கள் முன், திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், கல்வித்துறை அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, பள்ளிக்கு திருப்பி அனுப்பினர்.
போராட்டத்தை கைவிட, தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன்வைத்தனர். இது கல்வியாளர்கள் மட்டுமின்றி, பெற்றோர் உள்ளிட்ட பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மாணவர்கள் கோஷம் பொதுமக்கள் திகைப்பு
வரும் தேர்வுகளையொட்டியும், பள்ளியின் தேர்ச்சி விகிதம் போன்றவற்றை கருத்தில் கொண்டும், மாணவர்கள் திறம்பட தேர்வுகளை சந்திக்கும் வகையில், சிறப்பு வகுப்பு எடுக்க, தலைமையாசிரியர் மேற்கொண்ட நடவடிக்கையின் பிரதிபலிப்புத்தான் இந்தப் போராட்டம். கற்றுத்தரும் ஆசான்களுக்கு எதிராக மாணவர்கள் கோஷங்கள் எழுப்பியதை பார்த்த பொதுமக்கள் திகைப்புற்றனர்.
தலைமையாசிரியர், பள்ளியில் இருந்து வாகனத்தில் வெளியேறும் போது, மைதானத்தில் அமர்ந்திருந்த மாணவர்கள், அவருக்கு எதிராக கோஷத்துடன் கூச்சல் எழுப்பியபடி பின்தொடர்ந்த காட்சி வேதனையான ஒன்று.
இளைய தலைமுறையிடம் ஆபத்தான கருத்து கல்வியாளர்கள் கூறியதாவது:
தன்னிடம் படித்த மாணவர்கள் உயர் பொறுப்புகளில் அமரும்போது ஒவ்வொரு ஆசிரியர்களும் அடையும் மகிழ்ச்சிக்கு அளவில்லை. மாதா, பிதா, குரு, தெய்வம் என சொல்வர். தனக்கு கல்வி கற்பித்த குருவை மதிக்கும் பண்புடையவர்கள் தான், அறிவில் சிறந்தவர்களாகவும், சமுதாயம் மதிக்கும் மனிதர்களாகவும் விளங்குவர்.
இன்றைய மாணவ சமுதாயத்தில் பரவலான, தவறான கருத்தும் ஒன்று உள்ளது. அறிவு, ஞானம் என்பது வெறும் தகவல் பரிவர்த்தனை மட்டுமே என்று, இளைய தலைமுறை நம்புவது ஆபத்தான ஒன்று. இதன் விளைவாக, ஆசிரியர்களின் அருமை மாணவர்களுக்குத் தெரிவதில்லை.
பள்ளியில் ஆசிரியர்கள் மீதான மதிப்பு குறைய துவங்கி, கல்லுாரி காலத்தில், அது முற்றிலுமாக மறைய துவங்கும் ஆபத்தான நிலையில் உள்ளோம். 'குரு' ஒருவரே, வாழ்வில் அரிய அற்புதமான மாற்றங்களை உருவாக்க முடியும் என்பதை உணர்ந்தவர்கள் நிச்சயம் உயரம் தொட முடியும். அந்த குருவை, மாணவர்கள் மதிக்க கற்று கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

