/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆதியும் அந்தமும் இல்லா அவனை வழிபடாதவர் எவர்?
/
ஆதியும் அந்தமும் இல்லா அவனை வழிபடாதவர் எவர்?
ADDED : ஜன 22, 2024 01:08 AM

- நமது நிருபர் -
ஆதி அந்தம் இல்லாத அருட்பெரும்சோதியன் என்று சிவனை நாம் போற்றுகிறோம். சிவன் என்ற சொல்லுக்கு, துாய்மையானவன் அல்லது துாய்மைப்படுத்துபவன் என்பதே பொருள். உண்மையான பக்தர்களை துாக்கி வைப்பதும் அவனே... துாக்கி சுமப்பதும் அவனே... என்று அடியார்களும் போற்றுகின்றனர்.
சிவாலயங்கள் தோறும், மூலாலய கருவறை சுவற்றின் வெளிப்புறம், மூலவருக்கு பின்னே லிங்கோத்பவர் காட்சியளிக்கிறார். இது, சிவபெருமானின் உருவத்திருமேனிகளில் ஒன்று. ஜோதிப்பிழம்பாய், அடி, முடி காண முடியாதவாறு நிற்கும், சிவனுக்கு கீழே, பன்றி வடிவில் திருமாலும், தலைக்கு மேலே அன்னப்பறவை வடிவில் பிரம்மனும் காட்சியளிப்பர்.
ஒரு சமயத்தில், தங்களுக்குள் யார் பெரியவர் என, விஷ்ணு மற்றும் பிரம்மாவிடையே கருத்து தோன்றியது. சிவனிடம் கேட்டு தெளிவுற முடிவு செய்தனர். சிவபெருமான் ஆதி அந்தமில்லாத அருட்பெரும்சோதியை போல், பெரும் அக்னி பிழம்பாக உயர்ந்து நின்றார்.
பிரம்மா அன்னப்பறவையாக மாறி, முடியை காண புறப்பட்டார். விஷ்ணுவோ வெள்ளை வராகமாக மாறி, அடியை காண பூமிக்குள் சென்றார். இறுதியில் தோல்வியுற்றவர்கள், சிவனே உயர்ந்தவர் என உணர்ந்தனர். இது நடந்தது, மூன்றாம் ஜாமவேளை. அதன்காரணமாக, சிவராத்திரியின் மூன்றாம் ஜாமவேளையின் போது, லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடக்கிறது.
சாப விமோசனம்
இதில், சிவனின் முடியில் இருந்து தவறி விழுந்த தாழம்பூ, பிரம்மாவுக்கு உதவும் வகையில், பிரம்மா முடியை கண்டதாக பொய்யுரைத்தது. அதற்காக, சிவனால் இருவரும் தண்டிக்கப்பட்டனர். வாழ வைக்கும் தெய்வமாகிய திருமாலின் வேண்டுகோளின்படி, பிரம்மதேவருக்கு சாப விமோசனம் அளிக்கப்பட்டது.
சிவபெருமான், 'காசிக்கு சமமான அவிநாசி' திருத்தலத்தில் எம்மை பூஜித்துவர சாபம் நீங்கும்' என்று அருளினார். பிரம்மதேவன், படைப்பு தொழிலை துறந்து, திருப்புக்கொளியூர் வந்து, அவிநாசித்தலத்தில் பஞ்ச வில்வ மரத்தடியில் மேடையிட்டு, சிவாகம விதிகளின்படி, நுாறு ஆண்டுகள் சிவபூஜை செய்து வழிபட்டு வந்துள்ளார்.
சிவபூஜையில் மகிழ்ந்த தாயுமானவர், பிரம்மாவுக்கு படைப்பு தொழிலை மீண்டும் கொடுத்து, தாழம்பூவுக்கான சாபத்தில் இருந்தும் விமோசனம் அளித்தார். சாப விமோசனம் பெற்ற பிரம்மா, அவிநாசிலிங்கேஸ்வரருக்கு, சித்திரை மாதம் 11 நாட்கள் உற்சவம் நடத்தியிருக்கிறார். அதுவே, பிரம்மோற்சவம் என்ற பெயருடன் அழைக்கப்படுகிறது.
சிவனின் அடி, முடி காணும் திருமால் மற்றும் பிரம்மனின் போட்டி விளையாட்டு அனைவருக்கும் தெரியும். அதுவும், 'ஆகச்சிறந்த சாப விமோசன தலம் அவிநாசி' என்பதை உணர்த்தும் வகையில், ஆனந்த தாண்டவமாடும் அற்புத தெய்வமாகிய ஈசனின் திருவிளையாடலே.
நற்கருணை நாயகன்
வரும் பிப்., 2ம் தேதி கும்பாபிேஷக விழா காணப்போகும், பெருங்கருணையம்மன் சமேத அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் வளாகம், முழுமையாக சீர்செய்து, சிறப்புற திகழ்கிறது. அதில், மூலாலய கருவறை சுவற்றில், மேற்கு நோக்கியபடி, லிங்கோத்பவர் காட்சியளிக்கிறார்.
கடலை எப்படி அளவிட முடியாதோ, அதேபோல் கருணையின் பிறப்பிடமாகிய, கருணையப்பன் என்று பக்தர்களால் போற்றப்படும் சிவனும், லிங்கோத்பவராக காட்சியளிக்கிறார். வேறெந்த கோவில்களிலும் இல்லாத வகையில், அவிநாசித்தலத்தில் உள்ள லிங்கோத்பவர், மாறுபட்ட தோற்றத்துடன் காட்சியளிக்கிறார்.
நிலத்தை தோண்டிச் செல்லும் வராகம், வானுயர பறக்கும் அன்னத்துடன், இடது புறம் விஷ்ணுவும், வலதுபுறம் பிரம்மனும், அஞ்சி வழிபடும் தோற்றத்துடன், மான் மற்றும் மழுவேந்திய கரங்கள், அபய, ஹஸ்த முத்திரைகளுடன், நான்கு கரங்களுடன் நற்கருணை பொழிந்து கொண்டிருக்கிறார்.
ஆம், அடியாருக்கு அடியாராகிய ஆதிசிவன், அவிநாசி திருத்தலத்தின், ஒவ்வொரு அடியிலும் அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார். நாமும் சென்றோம்... வந்தோம்... என்று கோவிலுக்கு சென்று வரக்கூடாது. ஒவ்வொரு அடியிலும் சிவனது அருட்கடாட்சத்தை சுவைத்து, சிவபெருமான் அளிக்கும் அருளை உணர்ந்து வழிபடலாம்!