/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'யார்... அந்த சார்?'கழிவுநீர் பிரச்னையை தீர்க்கப்போவது... அ.தி.மு.க., கவுன்சிலர் ஆவேச கேள்வி
/
'யார்... அந்த சார்?'கழிவுநீர் பிரச்னையை தீர்க்கப்போவது... அ.தி.மு.க., கவுன்சிலர் ஆவேச கேள்வி
'யார்... அந்த சார்?'கழிவுநீர் பிரச்னையை தீர்க்கப்போவது... அ.தி.மு.க., கவுன்சிலர் ஆவேச கேள்வி
'யார்... அந்த சார்?'கழிவுநீர் பிரச்னையை தீர்க்கப்போவது... அ.தி.மு.க., கவுன்சிலர் ஆவேச கேள்வி
ADDED : ஜன 30, 2025 07:29 AM

அனுப்பர்பாளையம்; திருப்பூர் மாநகராட்சி, முதலாம் மண்டல கூட்டம் தலைவர் உமாமகேஸ்வரி தலைமையில் உதவி கமிஷனர் கணேஷ் சங்கர், முன்னிலையில் நடைபெற்றது.
அதில், கவுன்சிலர்கள் பேசியதாவது:
சாந்தி (அ.தி.மு.க.,): புதிய மின் விளக்கு பொருத்த வேண்டும். எந்த வீதியில் பார்த்தாலும், நாய் தொல்லை அதிகமாக உள்ளது. கட்டுப்படுத்த விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பரமசிவம் (சுகாதார அலுவலர்): தினசரி நாய்கள் பிடிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. நாய் பெருக்கத்தை விரைவாக கட்டுபடுத்த மண்டலம் வாரியாக அறுவை சிகிச்சை கூடம் அமைக்க நடிவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் அமைக்கப்படும்.
தங்கராஜ் (அ.தி.மு.க): ஆனந்தா அவென்யூ குடியிருப்பு பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் செல்ல டிஸ்போசல் பாயின்ட் இல்லை. இதனால் கழிவுநீர் கணியாம்பூண்டி ரோட்டில் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. கழிவுநீர் வருவதை தடுக்க வீடுகளில் 'சோக்பிட்' அமைக்க வலியுறுத்தியும் சிலர் மறுத்து வருகின்றனர். இதனால் கழிவுநீர் தொடர்ந்து தேங்கி வருகிறது.
நடவடிக்கை கோரி அதிகாரியிடம் முறையிட்டால் 'அந்த சாரை பாருங்கள், இந்த சாரை பாருங்கள்' என அதிகாரிகள் மாற்றி கூறுகின்றனர். எந்த சாரை பார்க்க வேண்டும்? 'யார் அந்த சார்' எனக்கு தெரிய வில்லை. ஐஸ்வரியா நகர், காவேரி நகர் ஆகிய வீதிகளில் மின் விளக்கு பொருத்தப்படாமல் உள்ளது. கான்கிரீட் சாலை புறக்கணிக்கப்படுகிறது.
குணசேகரன் (பா.ஜ.,): வீதிகளில் புதிய மின் விளக்கு பொருத்தப்படாமல் உள்ளது. மின் விளக்கு இல்லாததால் திருட்டு சம்பவம் நடக்கிறது. அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் எந்த வேலையும் செய்வதில்லை. குப்பை அள்ளுவதில் ஊழல் நடக்கிறது. நடவடிக்கை இல்லை என்றால் போராட்டம் நடத்த வேண்டி வரும். நாய் தொல்லை அதிகமாக உள்ளது.
தனலட்சுமி (அ.தி.மு.க): எனது வார்டில் சுமார் 15 சொறி நாய்கள் சுற்றி திரிகிறது. அதனை பிடிக்க வேண்டும். ரிங் ரோட்டில் மின் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. தள்ளி நட வேண்டும்.
திவ்யபாரதி (அ.தி.மு.க.,): வெங்கமேடு ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. தொடர் விபத்து ஏற்படுகிறது.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
ஆர்வமில்லை
கவுன்சிலர்கள் மாநகராட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டும் அளவிற்கு, மண்டல கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை. கூட்டம் காலை 11:00 மணிக்கு துவங்கியது. அ.தி.மு.க கவுன்சிலர்கள் திவ்ய பாரதி, 11:40 மணிக்கும், தனலட்சுமி, 11:45 மணிக்கும் என தாமதமாக வந்தனர்.
கவுன்சிலர்கள் நாகராஜ் (ம.தி.மு.க.,), பத்மாவதி (தி.மு.க.,), ரவிச்சந்திரன், செல்வராஜ் (இ.கம்யூ), ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.