/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை தரம் பிரிக்கும் மையங்கள் ஏன் செயல்படுவதில்லை; இடுவாய் கிராம மக்கள் 'கிடுக்கிப்பிடி' கேள்வி
/
குப்பை தரம் பிரிக்கும் மையங்கள் ஏன் செயல்படுவதில்லை; இடுவாய் கிராம மக்கள் 'கிடுக்கிப்பிடி' கேள்வி
குப்பை தரம் பிரிக்கும் மையங்கள் ஏன் செயல்படுவதில்லை; இடுவாய் கிராம மக்கள் 'கிடுக்கிப்பிடி' கேள்வி
குப்பை தரம் பிரிக்கும் மையங்கள் ஏன் செயல்படுவதில்லை; இடுவாய் கிராம மக்கள் 'கிடுக்கிப்பிடி' கேள்வி
ADDED : நவ 21, 2025 06:27 AM

பல்லடம்: 'பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட குப்பை தரம் பிரிக்கும் மையங்கள், கேட்பாரற்று கிடப்பது ஏன்?' என, இடுவாய் போராட்டக் குழுவினர், கேள்வி எழுப்பியுள்ளனர்.
திருப்பூர் அருகே, இடுவாய் ஊராட்சி, சின்னக்காளிபாளையத்தில், மாநகராட்சியின் குப்பைகள் கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருபுறம் சட்டப் போராட்டம், மறுபுறம் மக்கள் போராட்டம் என, போராட்டங்கள் நீடித்து வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, இடுவாய், 63 வேலம்பாளையம், ஆறுமுத்தாம்பாளையம், கரைப்புதுார் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள், குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வீடு தோறும் கருப்பு கொடிகளை ஏற்றி வைத்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் வேலவேந்தன் கூறியதாவது: பல்வேறு கிராமங்களிலும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, தற்போது, மாநகராட்சி நிர்வாகம் இடுவாய் கிராமத்தை தேர்வு செய்துள்ளது.
இது, முழுக்க முழுக்க விவசாயம் சார்ந்தது என்பதை அறியாமல், இந்த கிராமத்தை அழிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
எங்கள் முன்னோர்கள் கல்விச் சேவைக்காக வழங்கிய, 7 ஏக்கர் நிலத்தை, குப்பை கொட்டுவதற்கு பயன்படுத்த நினைப்பது ஏற் புடையதல்ல.
தொழில் வளர்ச்சி, மக்கள் தொகை பெருக்கம் இவற்றை கருத்தில் கொண்டு, குப்பை மேலாண்மையை முறையாக கையாண்டு இருக்க வேண்டும்.
ஆனால், நான்கு ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல், தற்போது, கிராமங்களை நோக்கி படையெடுத்து வருவது ஏன்? திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட குப்பை தரம் பிரிக்கும் மையங்கள், பயனின்றி கிடக்கின்றன.
இவை ஒவ்வொன்றும், 10 டன் குப்பைகளை தரம் பிரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
இதுபோன்று, மாநக ராட்சி பகுதியில், 20க்கும் மேற்பட்ட குப்பைத் தரம் பிரிக்கும் மையங்கள் பயன்படாமல், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்களும், துருப்பிடித்து வீணாகி கிடக்கின்றன.
மக்கள் வரிப்பணம் ஒருபுறம் வீணடிக்கப்படுவது குறித்து கவலை கொள்ளாமல், விவசாயம், கால்நடை வளர்ப்பு, பி.ஏ.பி., பாசனம், அறிவியல் பூங்கா, நீர்நிலை உள்ளிட்ட அனைத்தும் சூழ்ந்துள்ள பகுதியில், குப்பை கிடங்கு அமைக்க மாநகராட்சி துடித்து வருகிறது.
எதுவும் அருகில் இல்லை என, சட்டத்துக்கு புறம்பாக அனைத்தையும் மறைத்து, மாநகராட்சி நிர்வாகம், கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.
மாநகராட்சியின் இந்த அவலங்களை கோர்ட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளோம். இதன்படி, உரிய தீர்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்புடன் உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில், 20க்கும் மேற்பட்ட குப்பைத் தரம் பிரிக்கும் மையங்கள் பயன்படாமல், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்களும், துருப்பிடித்து மக்கள் வரிப்பணம் விரயமாகி வருகிறது

