/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அமெரிக்கா அறிவிப்பை கண்டிக்காதது ஏன்?
/
அமெரிக்கா அறிவிப்பை கண்டிக்காதது ஏன்?
ADDED : செப் 02, 2025 11:21 PM

பல்லடம்; திருப்பூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், அமெரிக்காவின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவிக்காதது குறித்து, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அதன் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:
அமெரிக்காவில் உள்ள விவசாய விளை பொருட்களை, இந்தியாவுக்கு இறக்குமதி செய்ய வேண்டும் என அமெரிக்கா நிர்பந்திக்கிறது. இந்தியா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் செயலை ஒருபோதும் நான் செய்ய மாட்டேன் என, பிரதமர் மோடி இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஆனால், திருப்பூரில், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக் கட்சி களின் சார்பில், நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில், அமெரிக்காவின் நடவடிக்கை குறித்து, எந்த ஒரு கட்சித் தலைவரும் கண்டனம் தெரிவிக்கவில்லை.
எனவே, அரசியல் ஆதாயம் தேடுவதற்காக இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்களா? என்ற கேள்வி எழுகிறது. மத்தியிலோ, மாநிலத்திலோ, ஆளுகின்ற எந்த ஒரு கட்சி தவறு செய்தாலும், அதை சுட்டிக்காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமை.
விவசாய விளை பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும் என, அமெரிக்கா கட்டாயப்படுத்துவது குறித்து கண்டனம் தெரிவிக்காமலும், இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக பேசாமலும், வெற்று விளம்பரமாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதை, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் கண்டிக்கிறது.
விவசாயிகளை பாதுகாக்கும் நடவடிக்கையை பிரதமர் மோடி செய்வதை பாராட்டாவிட்டாலும், அமெரிக்காவின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும்.
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியலுக்காகவும், விளம்பரம் தேடவும், தி.மு.க.,வுக்கு சாதகமாக, அதன் கூட்டணி கட்சிகள் நடத்திய ஆர்ப்பாட்டமாகவே இதனை பார்க்க வேண்டியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.