/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கழிவுநீர் சுத்திகரிப்பு மைய செயல்பாடு தாமதம் ஏன்?
/
கழிவுநீர் சுத்திகரிப்பு மைய செயல்பாடு தாமதம் ஏன்?
ADDED : ஜூன் 30, 2025 12:28 AM

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நொய்யல் கரை மேம்படுத்தும் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்காக மாநகராட்சி எல்லைக்குள் நொய்யல் ஆறு கடந்து செல்லும் ஆறு கி.மீ., தொலைவுக்கு ஆற்றின் இரு கரைகளும், சாய் தளமாக கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, ஆற்றின் கரையோரங்களில் இரு புறங்களிலும் சுத்திகரிப்பு மையம் அமைக்கும் பணி நடக்கிறது.
நொய்யல் ஆற்றின் தென்புறத்தில் ஆலங்காடு அருகே, அப்பகுதியில் வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யும் விதமாக ஒரு சுத்திகரிப்பு மையம் கட்டப்பட்டுள்ளது.
இந்த மையத்தின் பெரும்பாலான பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், பணிகள் தற்போது கிடப்பில் போட்டுக் கிடக்கிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள கட்டுமானங்கள் பயன்பாடின்றி வீணாகும் நிலை காணப்படுகிறது.
மேலும், சுத்திகரிப்பு மைய வளாகம் எந்த பாதுகாப்பும் இல்லாத நிலையில் உள்ளது. இதனால், போதை நபர்கள் உள்ளிட்ட சமூக விரோத கும்பல்கள் இங்கு முகாமிடுவது வழக்கமாக உள்ளது. மையத்துக்கு கழிவுநீர் கொண்டு செல்லும் ஒரு பிரதான கால்வாய் பணி முடிவடையாமல் உள்ள காரணத்தால் மையம் செயல்பாட்டுக்கு வருவது தாமதமாகிறது.
இப்பணி விரைந்து முடித்து சுத்திகரிப்பு மையம் செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.