/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்னை: மண்டல கூட்டத்தில் 'அனல்'
/
தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்னை: மண்டல கூட்டத்தில் 'அனல்'
தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்னை: மண்டல கூட்டத்தில் 'அனல்'
தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்னை: மண்டல கூட்டத்தில் 'அனல்'
ADDED : மார் 29, 2025 11:48 PM

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டல குழு கூட்டம், முருகம்பாளையம் மண்டல அலுவலகத்தில் நடந்தது. மண்டல குழு தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார். துணை மேயர் பாலசுப்ரமணியம், உதவி கமிஷனர் வினோத் முன்னிலை வகித்தனர்.
கவுன்சிலர்கள் விவாதம்:
அன்பகம் திருப்பதி (மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர்): -அனைத்து வார்டுகளிலும், நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் நிலை குறித்து மண்டலத் தலைவர் வாரம் ஒரு முறை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்த வேண்டும். எனது வார்டில், பாரப்பாளையம் பகுதியில் தெருவிளக்கு பிரச்னை அதிகம் உள்ளது.
பாரப்பாளையம் பள்ளி அருகே உள்ள பாலம் மக்கள் பயன்பாட்டில் உள்ளது. ஆனால், தெரு விளக்கு இல்லை. மங்கலம் ரோடு குண்டும், குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.
மாநகராட்சியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள வரி வசூல் மிகவும் முக்கியம். பொதுமக்கள் வரி கட்ட கால அவகாசம் வழங்க வேண்டும். பாதாள சாக்கடை மற்றும் நான்காவது குடிநீர் திட்ட பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது.
சேகர் (அ.தி.மு.க.,): காலேஜ் ரோட்டில் ஏராள மான ஆக்கிரமிப்பு உள்ளது. கடைகளுக்கு முன் வைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு போர்டுகளால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. தெருவிளக்கு மற்றும் மின் கம்பங்கள் பல இடங்களில் பழுதாகி உள்ளது.
சாந்தாமணி (ம.தி.மு.க.,): பல பகுதிகளில் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகிறது. சில பகுதிகளில் குடிநீர் வினியோகம் ஒன்பது நாள் ஆகிறது. குடிநீர் குழாய்கள் பல இடங்களில் சேதமடைந்து, குடிநீர் வீணாகிறது. அதேபோல் குப்பை பிரச்னை உள்ளது.
குப்பை சேகரிக்கும் வாகனங்கள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறையால் இந்த நிலை உள்ளது. குடிநீர் குழாய் இணைப்பை துண்டிக்கும் போது வார்டு கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மங்கலம் ரோட்டில், பல இடங்களில் ரோடு பணிகள் மந்த கதியில் நடக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். எந்த வழியில் செல்வது எனத் தெரியாமல் தவிக்கின்றனர்.
சாந்தி (தி.மு.க.,): ஆண்டிபாளையம், சின்னாண்டிபாளையம் சுற்றுப்பகுதிகளில் குடிநீர் குழாய் உடைப்புகள் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள குளத்தில் கழிவுநீர் தேங்கி வருகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
இதனை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சின்னியகவுண்டன் புதுாரில், சாக்கடை கால்வாய் முழுவதும் குப்பை மற்றும் மண் தேங்கி கிடக்கிறது. கழிவு நீர் செல்ல முடியாமல் துர்நாற்றம் வீசுகிறது.
மணிமேகலை (மா.கம்யூ.,): 4வது குடிநீர் திட்டத்தில், குடிநீர் தொடர்ந்து மக்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இது வரை எனது வார்டில் குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.தெருவிளக்கு பிரச்னை தொடர்ந்து தீர்வு காணப்படாமல் நீடித்து வருகிறது. நொச்சிபாளையம் பிரிவில், மழை நீர் வடிகால் வசதியில்லை.
சாந்தாமணி (தி.மு.க.,): கண்ணன் நகர் பகுதியில் பல ஆண்டுகளாக பாதாள சாக்கடை வசதி இல்லாமல், கழிவுநீர் செல்ல முடியாமல், வீடுகள் அருகே தேங்குகிறது. தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தெருவிளக்கு பிரச்னை பல வீதிகளில் தீர்வு காணப்படாமல் உள்ளது. அதிகாரிகளிடம் கூறியும், எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.
ஆனந்தி (அ.தி.மு.க.,): வெள்ளியங்காடு 60 அடி ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பை சேகரிக்க வரும் பேட்டரி வாகனங்கள் முறையாக இயங்குவதில்லை. குப்பைகள் பல பகுதிகளில் தேங்கி கிடக்கிறது. தாராபுரம் ரோட்டில், வாகனங்கள் அதிவேகத்தில் செல்வதால் விபத்து ஏற்படுகிறது; வேகத்தடை அமைக்க வேண்டும்.
கவிதா (தி.மு.க.,): திருக்குமரன் நகர், வள்ளலார் நகர் ஆகிய பகுதிகளில் சாக்கடை கால்வாய் வசதியில்லை. இதனால், கழிவுகள் வீடுகளின் முன்புறம் தேங்கி கிடக்கிறது. தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. சமுதாய நலக்கூடம் இன்னும் சீரமைப்பு செய்யப்படாமல் உள்ளது.
பத்மநாபன் (மண்டல தலைவர்): அனைத்து வார்டு பகுதிகளிலும், ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு செய்து அகற்றப்படும். அடிப்படை பிரச்னையாக உள்ள குடிநீர், தார் சாலை, தெரு விளக்கு, மழை நீர் வடிகால், திடக்கழிவு மேலாண்மை போன்றவற்றில் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும்.
தெரு விளக்கு பிரச்னையில் தொடர்ந்து புகார்கள் அதிகரித்து வருகிறது. அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், கவுன்சிலர்களுடன் அதிகாரிகள் இணைந்து பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.