/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாதயாத்திரை பக்தர்களுக்காக நடைபாதை அமைக்கப்படுமா?
/
பாதயாத்திரை பக்தர்களுக்காக நடைபாதை அமைக்கப்படுமா?
ADDED : ஏப் 15, 2025 06:17 AM

பல்லடம்; மாதப்பூர் முத்துக்குமார சுவாமி கோவிலுக்கு பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்காக பல்லடத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலையில் பிரத்யேக நடைபாதை அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பல்லடம் அடுத்த மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவில், தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. கோவிலில், சிறிய குன்றின் மேல் மூலவராக முத்துக்குமாரசுவாமி அருள்பாலிக்கிறார்.
புராதனச் சிறப்புமிக்க இக்கோவிலில், வைகாசி விசாகம், கார்த்திகை தீபம், தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட பல்வேறு விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நாட்களில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.
முக்கிய பண்டிகைகள், விழாக்களின் போது, பெரும்பாலான பக்தர்கள், பல்லடத்திலிருந்து பாதயாத்திரையாக நடந்தே கோவிலுக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
வாகன போக்குவரத்து நிறைந்த தேசிய நெடுஞ்சாலையில், ஆபத்துக்கு இடையே பாத யாத்திரை செல்வது விபத்து அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி, பல்லடம், -மாதப்பூர் முத்துக்குமார சுவாமி கோவில் வரை, ரோட்டோரம் பிரத்யேக நடைபாதை அமைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பு.