ADDED : ஏப் 17, 2026 09:43 PM
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தின் 8 சட்டசபை தொகுதிகளிலும், பிரதான கட்சி வேட்பாளர்களின் வாக்குகளைச் சிதறடிக்கும் நோக்கில், அவர்களின் அதே பெயரைக் கொண்ட சுயேச்சை வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு:
திருப்பூர் தெற்கு தொகுதியில் தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் மேயர் தினேஷ் குமார் பெயரிலேயே, மேலும் மூன்று பேர், இவரது பெயரையொத்தவர்கள் சுயேட்சைகளாகப் போட்டியிடுகின்றனர். இவர்களில் இருவர் அதே தொகுதியையும், ஒருவர் பல்லடத்தையும் சேர்ந்தவர்கள். அதேபோல், திருப்பூர் வடக்கு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஆனந்தன் களம் காண்கிறார். இவருக்குப் போட்டியாக, பல்லடம் தொகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் சுயேச்சையாகக் களம் இறக்கப்பட்டுள்ளார்.
அவிநாசி மற்றும் தாராபுரம்:
அவிநாசி தொகுதியில் தி.மு.க.வின் இளம் வேட்பாளரான டாக்டர் கோகிலாமணி போட்டியிடுகிறார். இவரைப் போலவே எம்.கோகிலாமணி என்ற பெயருடைய கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தொகுதியைச் சேர்ந்த ஒருவர் சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். தாராபுரம் தொகுதியிலும் இதே நிலைதான்; தி.மு.க. வேட்பாளர் இந்திராணி என்பவரின் பெயரிலேயே, அதே தொகுதியைச் சேர்ந்த மற்றொரு இந்திராணியும் சுயேட்சையாகப் போட்டியிடுகிறார்.
பல்லடம் மற்றும் மடத்துக்குளம்:
பல்லடம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்.எல்.ஏ. செல்வராஜ் பெயரிலேயே, அதே தொகுதியைச் சேர்ந்த மேலும் இரு 'செல்வராஜ்'கள் களத்தில் உள்ளனர். மடத்துக்குளம் தொகுதியைப் பொறுத்தவரை, அ.தி.மு.க. கூட்டணியில் அ.ம.மு.க சார்பில் போட்டியிடும் சண்முகவேலுக்கு போட்டியாக, அதே பெயருடைய மூவர் சுயேட்சைகளாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி, பிரதான வேட்பாளர்களுக்குச் செல்லும் வாக்குகளைக் குறிவைக்கும் இந்த 'பெயர் பொருத்தம்' தேர்தல் களத்தில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
