/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொண்டைக்கடலைக்கு விலை கிடைக்குமா? கண்டுகொள்ளாத அரசால் கவலை
/
கொண்டைக்கடலைக்கு விலை கிடைக்குமா? கண்டுகொள்ளாத அரசால் கவலை
கொண்டைக்கடலைக்கு விலை கிடைக்குமா? கண்டுகொள்ளாத அரசால் கவலை
கொண்டைக்கடலைக்கு விலை கிடைக்குமா? கண்டுகொள்ளாத அரசால் கவலை
ADDED : பிப் 03, 2025 06:50 AM

உடுமலை : 'மானாவாரியாக பயிரிடப்படும் கொண்டைக்கடலை சாகுபடியில், ஆண்டுதோறும் பாதிப்பு ஏற்பட்டும் அரசு கண்டுகொள்ளவில்லை,' என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில், வடகிழக்கு பருவமழையை ஆதாரமாகக்கொண்டு, மானாவாரியாக கொண்டைக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது.
களிமண் விளைநிலங்களில் மட்டும் விளையும், இச்சாகுபடி பரப்பு பல்வேறு காரணங்களால், ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. குறிப்பாக, விதைப்பின் போது, அதிக விலைக்கு வாங்கப்படும் கொண்டைக்கடலைக்கு, அறுவடையின் போது, போதிய விலை கிடைப்பதில்லை.
மேலும், பருவ நிலை மாற்றங்களால், செடியின் வளர்ச்சித்தருணத்தில், பனிப்பொழிவு இருப்பதில்லை; விதைப்பும் குறித்த நேரத்தில் மேற்கொள்ளப்படுவதில்லை.
விவசாயிகள் கூறியதாவது: கொண்டைக்கடலையில், நல்ல விளைச்சல் கிடைக்க, பருவமழைக்கு பிறகு குறித்த நேரத்தில், பனிப்பொழிவு துவங்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக, பருவநிலை மாற்றங்களால், போதிய விளைச்சல் கிடைக்கவில்லை.
விதைப்பு, சராசரியாக நான்கு மருந்து தெளித்தல், தொழிலாளர் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால், ஏக்கருக்கு, 15 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக செலவாகிறது. இந்தாண்டு, கிலோ 65 ரூபாய்க்கு, கொண்டைக்கடலை விதைப்பு செய்தோம்.
ஏக்கருக்கு, 600 கிலோ முதல் 900 கிலோ வரை, விளைச்சல் கிடைக்கும். சுண்டல் மற்றும் கடலை மாவு தயாரிப்புக்கு, இக்கடலை பயன்படுகிறது. இந்நிலையில், இறக்குமதி உள்ளிட்ட காரணங்களால், போதிய விலை கிடைப்பதில்லை.
இந்தாண்டு, நிலையான விலை கிடைக்க, தமிழக அரசு உதவ வேண்டும். விவசாயிகளிடமிருந்து கொண்டைக்கடலையை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, புரதச்சத்துகள் மிகுந்த கொண்டைக்கடலையை அரசு வழங்கலாம். சிறுதானியங்கள் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படும். அரசு, கொண்டைக்கடலை சாகுபடி பரப்பு சரியாமல், இருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீண்ட காலமாக, மானாவாரி சாகுபடி விவசாயிகளின் எந்த பிரச்னையையும், தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை.
வேளாண்துறை வாயிலாக அறுவடை காலத்தில், கணக்கெடுப்பு நடத்தினால் மட்டுமே உண்மை நிலை தெரியவரும். மகசூல் பாதிப்பு ஏற்பட்டால் அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.