/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'உறங்கும்' மனுக்கள் உயிர் பெறுமா?
/
'உறங்கும்' மனுக்கள் உயிர் பெறுமா?
ADDED : ஜன 22, 2024 12:56 AM
திருப்பூர்;வாரந்தோறும் திங்கள் தோறும், கலெக்டர் தலைமையில் நடக்கும் குறைதீர்ப்புக் கூட்டம் வாயிலாக பெறப்படும் அத்தனை மனுக்களுக்கும் தீர்வு கிடைக்காததால், அவை, குறைகேட்பு கூட்டங்களாக மட்டுமே உள்ளன.
'உங்கள் தொகுதியில் முதல்வர்', மக்களுடன் முதல்வர் என பல்வேறு பெயர்களில் மக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள், முதல்வரின் தனிப்பிரிவுக்கு சென்று சேர்கிறது என்பதை மறுக்க முடியாது.
'அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சம்மந்தப்பட்ட துறையினருக்கு பரிந்துரையும் செய்யப்படுகிறது. ஆனால், பெறப்படும் மனுக்களில் ஒரு சில பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காணும் அதிகாரிகள், பல அதிமுக்கிய பிரச்னைகளை கிடப்பில் போட்டு வைத்துள்ளனர்.
'ஸ்டேட்டஸ்' தெரியணும்!
சமூக ஆர்வலர் பழனிகுமார் கூறியதாவது:
குறைதீர் கூட்டங்களில் வழங்கப்படும் மனுக்கள், பரிசீலனையில் உள்ளதா, நிராகரிக்கப்பட்டதா என்ற விபரத்தை, அரசின் 'வெப்சைட்' வாயிலாகவே அறிந்துக் கொள்ளும் வாய்ப்பு இருந்தது. தற்போது, வழங்கும் விண்ணப்பங்களின் 'ஸ்டேடஸ்' அறிந்து கொள்ள முடிவதில்லை.
வழங்கும் மனுக்கள் குறித்து அறிந்துக் கொள்ள, 1100 என்ற கட்டணமில்லா எண் வழங்கப்பட்டது; அதில் தொடர்புகொள்ளும் போது, 'தாங்கள் வழங்கிய மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது; சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளை சந்தித்து விளக்கம் பெற்றுக் கொள்ளுங்கள்' என்கின்றனர்.
ஆனால், அவை திரும்ப சம்மந்தப்பட்ட அந்த அதிகாரிகளின் பரிசீலனைக்கே வரும் போது, கோரிக்கை நிறைவேறுவதில் இழுபறியே நீடிக்கிறது. எனவே, குறைகேட்பு கூட்டங்கள் என்ற நிலையில் மட்டுமே உள்ள குறைதீர்ப்பு கூட்டங்களில் பெறப்படும் மனுக்களுக்கு, உடனுக்குடன் தீர்வு காணப்பட வேண்டும், என்றார்.
இரட்டை வேடம்
'அனைத்து அரசுத்துறைகளிலும் ஊழியர் பற்றாக்குறை அதிகளவில் உள்ள நிலையில், குவியும் மனுக்களுக்கு தீர்வு சொல்வதும், தீர்வு காண்பதும் சற்று கடினமாக உள்ளது' என்கின்றர் அரசுத்துறை அதிகாரிகள். ஆனால், கலெக்டர், அமைச்சர் முன்னிலையில் நடக்கும் கூட்டங்களில், 'மனுக்களுக்கு தீர்வு கண்டு விடுவோம்' என சொல்லி, தற்காத்துக் கொள்கின்றனர்,' என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
காகித அளவில் அரசாணை!
கடந்த, 2018 ஜூன், 11 அன்று வெளியிடப்பட்ட அரசாணை எண், 73ல், 'மனுக்கள் மீது எடுக்கப்பட்ட தீர்வு குறித்து, 30 நாட்களில் தெரிவிக்க வேண்டும்' என, சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால், இந்த அரசாணைப்படி அதிகாரிகள் செயல்படுவதில்லை என்ற புகார் இருந்துக் கொண்டு தான் இருக்கிறது. எனவே, பெறப்படும் மனுக்கள் எத்தனை, அவற்றில் தீர்வு காணப்பட்டவை எத்தனை என்ற விவரத்தை, மாவட்ட, தாலுகா வாரியாக வெளியிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.