/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒதுக்கிய வீடு கிடைக்குமா? மாற்றுத்திறனாளி கண்ணீர்
/
ஒதுக்கிய வீடு கிடைக்குமா? மாற்றுத்திறனாளி கண்ணீர்
ADDED : டிச 03, 2024 09:04 PM

திருப்பூரில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில், முகமது யூசுப் என்பவர், வீடு வழங்க கோரி தரையில் அமர்ந்து பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார்.
தாராபுரம் தாலுகா, கொளத்துப்பாளையத்தை சேர்ந்த முகமது யூசுப், 57; கால் பாதித்த மாற்றுத்திறனாளி. வீடு கேட்டு தொடர்ந்து போராடிய இவருக்கு, கடந்த 2022ல், பெதப்பம்பட்டி - உடுமலை ரோடு புக்குளம் ஜெ.ஜெ., நகர் பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பங்களிப்பு தொகை, 1.70 லட்சம் ரூபாய் செலுத்தவேண்டிய நிலையில், முகமது யூசுப், கடந்த 2023, ஜூனில், 70,700 ரூபாய் தவணை தொகையை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திடம் செலுத்தினார்.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில், முகமது யூசுப், வீடு வழங்க கோரி தரையில் அமர்ந்து பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதோடு கலெக்டரிடம் சென்று, கண்ணீர் மல்க மனு அளித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
என்னால், வேலைக்கு செல்லமுடியவில்லை. மனைவியின் சிறிய வருமானம் மற்றும் எனக்கு கிடைக்கும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை நம்பியே வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கிறோம்.
புக்குளத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்தனர். பலரிடம் கடன் வாங்கித்தான், தவணைத்தொகை, 70 ஆயிரம் ரூபாய் செலுத்தினேன். மீதம் ஒரு லட்சம் ரூபாய் என்னால் செலுத்த இயலாத நிலையில் உள்ளேன்.
ஒரு லட்சம் ரூபாயை தள்ளுபடி செய்து, ஒதுக்கீடு செய்த வீட்டை வழங்கக்கோரி, பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டேன். குறைகேட்பு கூட்டத்தில், கலெக்டரிடம் நேரடியாக மனு அளித்தேன்.
வங்கிக்கடன் செலுத்த இயலாது என்பதால், மாற்று ஏற்பாடுகள் வாயிலாக, ஒதுக்கீடு செய்த வீட்டை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
- நமது நிருபர் -