நெடுஞ்சாலைத்துறையின் அலுவலக சீரமைப்பில்... பரிசீலிக்கப்படுமா? ரோடு கட்டுப்பாடு குண்டடத்துக்கு மாற்ற எதிர்ப்பு
நெடுஞ்சாலைத்துறையின் அலுவலக சீரமைப்பில்... பரிசீலிக்கப்படுமா? ரோடு கட்டுப்பாடு குண்டடத்துக்கு மாற்ற எதிர்ப்பு
UPDATED : ஜூன் 28, 2026 05:49 PM
ADDED : ஜூன் 28, 2026 05:41 PM

உடுமலை: நெடுஞ்சாலைத்துறை சீரமைப்புத்திட்டத்தில், உடுமலை நெடுஞ்சாலைத்துறை உட்கோட்ட பராமரிப்பிலுள்ள பல ரோடுகள், குண்டடம் புதிய அலுவலக கட்டுப்பாட்டுக்கு மாற்றப்பட உள்ளது. இதற்கு பொதுமக்கள் மற்றும் அலுவலர்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மக்கள், அலுவலர்கள் கோரிக்கையை பரிசீலித்து மாற்றம் கொண்டு வர எதிர்பார்ப்பு நிலவுகிறது. தமிழக அரசு, நெடுஞ்சாலைத்துறை சீரமைப்புக்கான அரசாணையை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, சிறப்புத்திட்டங்கள் பிரிவு கலைக்கப்பட்டுள்ளது.
நபார்டு மற்றும் கிராம சாலைகள் பிரிவு, திட்டங்கள் போன்ற பிரிவுகள், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் கோட்ட நெடுஞ்சாலைத்துறையிலும், அரசாணையின்படி பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
காங்கயத்தில் செயல்பட்டு வந்த நபார்டு மற்றும் கிராம சாலைகள் உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம், குண்டடம் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
புதிதாக அங்கு உருவாக்கப்படும், உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில், உடுமலை, மடத்துக்குளம் உட்கோட்ட பராமரிப்பில் தற்போதுள்ள ரோடுகளை பிரித்து, சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான கருத்துருவும், நெடுஞ்சாலைத்துறை தரப்பில் தயார் செய்து உயர் அதிகாரிகள் அனுமதிக்கு அனுப்பியுள்ளனர்.
அவ்வகையில், கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை மையமாகக்கொண்டு, எல்லைகள் பிரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலையின் தெற்கு பகுதியிலுள்ள ரோடுகள், உடுமலை, மடத்துக்குளம் கட்டுப்பாட்டிலும், வடக்கு பகுதி முழுவதுமான ரோடுகள் அனைத்தும் குண்டடம் அலுவலகத்துடனும் சேர்க்க வாய்ப்புள்ளது.
இந்த சீரமைப்பு பல்வேறு குழப்பங்களையும், மக்கள், அலுவலர்களுக்கு பல்வேறு பாதிப்புகளையும் ஏற்படுத்தும் என எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
உதாரணமாக, உடுமலை நகரில் துவங்கும் பல்லடம் மாநில நெடுஞ்சாலை, குண்டடம் அலுவலகத்துடன் இணைக்கப்பட்டால், அலுவலர்கள் நேரடி கண்காணிப்பு குறையும். ஆக்கிரமிப்பு மற்றும் இதர பிரச்னைகள் குறித்து புகார் செய்ய, 40 கி.மீ.,க்கும் அதிகமாக பயணித்து குண்டடம் செல்ல வேண்டும்.
உடுமலையில் அமைந்துள்ள மாநில நெடுஞ்சாலை, தற்போது உடுமலை உதவி கோட்ட பொறியாளர் அலுவலக கட்டுப்பாட்டில் பராமரிக்கப்படுகிறது. இத்தகைய எளிய நிர்வாக நடைமுறை கைவிடப்பட்டு, தொலைதுாரத்திலுள்ள அலுவலகத்துடன் இணைப்பது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.
மேலும், குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதியிலுள்ள பெரும்பாலான கிராம ரோடுகள், மாவட்ட முக்கிய ரோடுகள் குண்டடம் அலுவலக கட்டுப்பாட்டுக்கு மாற்றப்பட்டால், பல்வேறு நிர்வாக சிக்கல்கள் ஏற்படும்.
எனவே, நெடுஞ்சாலைத்துறை அலுவலக சீரமைப்புக்கு முன், பொதுமக்கள் மற்றும் அலுவலர்களிடம் கருத்து கேட்டு, அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பு இல்லாமல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சீரமைப்பில் குளறுபடி இது குறித்து தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது: தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை சீரமைப்பில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. அரசு ஒதுக்கியுள்ள பணியிடம் மற்றும் அலகுகளுக்கு ஒதுக்கப்படவில்லை. உதாரணமாக, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்துக்கு கண்காணிப்பாளர் பணியிடம் உள்ளது.
இதுவே நபார்டு மற்றும் கிராம சாலைகள் உட்கோட்டத்தில் இப்பணியிடம் ஒதுக்கப்படவில்லை. இதே போல், உடுமலை பகுதியிலுள்ள ரோடுகளை குண்டடம் அலுவலகத்துடன் இணைத்தால், பராமரிப்பு மற்றும் இதர பணிகளுக்காக அலுவலர்கள், தொழிலாளர்கள் அதிக துாரம் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
ரோடுகள் ஒரு பகுதியிலும், நிர்வாக அலுவலகம் தொலைதுாரத்திலும் அமைந்தால், சிக்கல் ஏற்படும். அவரச கதியில் அலுவலர்களை இடம மாற்றம் செய்யும் போது, அவர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் மற்றும் இதர வசதிகள் கிடைக்கச்செய்ய வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.
