மாவட்ட எல்லையில் போலீஸ் செக்போஸ்ட்கள் பயன்பாட்டுக்கு வருமா?
மாவட்ட எல்லையில் போலீஸ் செக்போஸ்ட்கள் பயன்பாட்டுக்கு வருமா?
UPDATED : செப் 07, 2026 10:55 PM
ADDED : செப் 07, 2026 09:17 PM
உடுமலை: உடுமலை அருகே, மாவட்ட எல்லையில், போலீஸ் செக்போஸ்ட்களை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்து, கண்காணிப்பு மற்றும் குற்றத்தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த திருப்பூர் எஸ்.பி., உத்தரவிட வேண்டும். திருப்பூர்-கோவை மாவட்ட எல்லையில், உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட தேவனுார்புதுார் அமைந்துள்ளது. தளி போலீஸ் கட்டுப்பாட்டிலுள்ள இப்பகுதியை ஒட்டி, பல்வேறு நீராதாரங்கள், மலையடிவாரத்தில் அமைந்துள்ளன.
நீராதாரங்களில் இருந்து, கனிம வளங்கள் கடத்தலை தடுக்க தேவனுார்புதுாரில், புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என, நீண்ட காலமாக கோரிக்கை விடப்பட்டு வந்தது.
இதையடுத்து, தற்காலிகமாக தேவனுார்புதுார் அருகே, ஆண்டியூர் பிரிவில், திருப்பூர்- கோவை மாவட்ட எல்லையில், போலீஸ் செக்போஸ்ட் சாவடி சில ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டது.
உடுமலை - ஆனைமலை ரோட்டில் வாகனங்களை கண்காணிக்கவும், கனிம வள கடத்தலை தடுக்கவும், செக்போஸ்ட்டில் தளி போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பெருந்தொற்று பரவல் காலத்தில், ஊரடங்கு விதிமீறல் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் இந்த சோதனை சாவடி பயன்பட்டது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன், இந்த செக்போஸ்ட்டுக்கு நிரந்தர கட்டடமும் கட்டப்பட்டது. பின்னர், போலீசார் நியமிக்கப்படாமல், கட்டடமும் காட்சிப்பொருளாக பூட்டியே வைக்கப்பட்டுள்ளது.
இதனால், இரவு நேரங்களில், கனிம வளம் கடத்தல் வாகனங்கள், தடையில்லாமல் அருகிலுள்ள மாவட்டத்துக்கு செல்லும் வாய்ப்புள்ளது. மேலும், குற்றத்தடுப்பு பணியில், பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
தளி போலீஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டில் அதிகளவு கிராமங்கள் உள்ளதால், புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட காலமாக உள்ளது. அதற்கு தற்காலிக தீர்வாக தேவனுார்புதுார் செக்போஸ்ட் இருந்தது.
அந்த செக்போஸ்ட்டும் மூடப்பட்டுள்ளதால், அப்பகுதி கிராமங்களில் சிறு திருட்டுகள் அதிகரித்துள்ளது. எனவே, போலீஸ் செக்போஸ்ட்டை புறக்காவல் நிலையமாக தரம் உயர்த்தி தேவையான போலீசார் நியமிக்க வேண்டும்.
செயல்பாட்டில் இல்லை இதே போல், குடிமங்கலம் போலீஸ் கட்டுப்பாட்டிலும் அதிகளவு கிராமங்கள் உள்ளன. திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்ட போது, கோவை மாவட்டத்துக்குட்பட்ட நெகமம் மற்றும் கோமங்கலம் போலீஸ் கட்டுப்பாட்டில் இருந்து, 15க்கும் அதிகமான கிராமங்கள் குடிமங்கலம் போலீஸ் கட்டுப்பாட்டில் சேர்க்கப்பட்டன.
இதனால், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. முன்பு, பொள்ளாச்சி-தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், கோவை-திருப்பூர் மாவட்ட எல்லையான புதுப்பாளையத்தில் தற்காலிக செக்போஸ்ட் செயல்பட்டு வந்தது.
தற்போது அந்த செக்போஸ்ட் செயல்பாட்டில் இல்லை. கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு இந்த வழித்தடத்திலேயே அதிகளவு கனரக வாகனங்கள் செல்கின்றன.
இவ்வாகனங்களை கண்காணிக்கவும், குற்றத்தடுப்பு பணிகளுக்காகவும், மீண்டும் செக்போஸ்ட்டை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இது குறித்து திருப்பூர் எஸ்.பி., நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு நிலவுகிறது.
