தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நாற்று உற்பத்திக்கு தோட்டக்கலை பண்ணை ...அமையுமா?:பரிதாப நிலையில் தேர்வு செய்யப்பட்ட இடம்

நாற்று உற்பத்திக்கு தோட்டக்கலை பண்ணை ...அமையுமா?:பரிதாப நிலையில் தேர்வு செய்யப்பட்ட இடம்

நாற்று உற்பத்திக்கு தோட்டக்கலை பண்ணை ...அமையுமா?:பரிதாப நிலையில் தேர்வு செய்யப்பட்ட இடம்


UPDATED : செப் 28, 2026 03:06 AM

ADDED : செப் 27, 2026 05:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 28, 2026 03:06 AM ADDED : செப் 27, 2026 05:51 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடுமலை: காய்கறி சாகுபடிக்கு தேவையான நாற்றுகளை உற்பத்தி செய்யவும், பூங்கா அமைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சிறப்பு தோட்டக்கலை பூங்கா மற்றும் பண்ணை அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட நிலமும், சமூகவிரோதிகள் மையமாக மாறியுள்ளது. உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில், காய்கறி சாகுபடி பிரதானமாக உள்ளது. உடுமலை வட்டாரத்தில் மட்டும், மா, தென்னை என தோட்டக்கலை சார்ந்த சாகுபடிகள் மட்டும், 20 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பில் மேற்கொள்ளப்படுகிறது.

இச்சாகுபடிக்கு தேவையான நாற்றுகளை, விவசாயிகள் தனியார் பண்ணைகளில் இருந்து வாங்குகின்றனர். சில சீசன்களில் தரமில்லாத நாற்றுகளால், மகசூல் பாதித்து நஷ்டம் ஏற்படுகிறது.

பிரச்னைக்கு தீர்வாக, தோட்டக்கலைத்துறையே நாற்றுகளை உற்பத்தி செய்து வழங்க, அரசுக்கு தொடர்ச்சியாக மனு அனுப்பினர். அதே போல், தமிழ்நாடு வேளாண் பல்கலை.,யால், விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தப்படும் விதைகளை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், மானிய திட்டங்களுக்கான நிரந்தர செயல்விளக்க திடல்களும் இப்பகுதியில் இல்லை.

பிரச்னைக்கு தீர்வாக கடந்த 2022ல், தோட்டக்கலைத்துறை அனுப்பிய கருத்துரு அடிப்படையில், தோட்டக்கலை பூங்கா மற்றும் நாற்று பண்ணை அமைக்க இடம் தேர்வு செய்ய, அரசு உத்தரவிட்டது.

பின்னர், சிவசக்திகாலனி அருகே ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான, 35 ஏக்கர் தேர்வு செய்யப்பட்டது. பயன்பாடு இல்லாத அந்நிலத்தில், மக்கள் பயன்பாட்டுக்காக பூங்காவும், விவசாயிகளின் தேவைக்காக நாற்றுப்பண்ணையும் அமைக்க திட்டமிடப்பட்டது.

திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக தோட்டக்கலைத்துறை, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து முன்மொழிவும் தயாரிக்கப்பட்டது. ஆனால், திட்டம் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.

தற்போது அந்த நிலம் புதர் மண்டி, சமூக விரோத செயல்களின் மையமாக மாறி விட்டது. அருகிலுள்ள குடியிருப்புகளை சேர்ந்தவர்கள் பாதிக்கின்றனர். அவர்கள் தரப்பிலும், திட்டமிட்டபடி அவ்விடத்தில் தோட்டக்கலை பூங்கா அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

விவசாயிகள் கூறுகையில், 'தக்காளி உட்பட காய்கறிகளின் முக்கிய உற்பத்தி மையமாக உடுமலை உள்ளது. இங்கு நாற்றுப்பண்ணை இருந்தால், தரமான நாற்றுகள் கிடைக்கும்; செயல் விளக்க பண்ணையும் இருந்தால், எளிதாக தொழில்நுட்ப உதவிகளும் கிடைக்கும். ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட இடத்தில், இத்திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அரசுக்கு மனு அனுப்பியுள்ளோம்,' என்றனர்.

இடத்தை பெறுவதில் இழுபறி

உடுமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் கலாமணி கூறுகையில், 'அரசு தோட்டக்கலை பூங்கா மற்றும் பண்ணை அமைக்கும் திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தை, ஹிந்து சமய அறநிலையத்துறையிடம் இருந்து பெறுவதில் இழுபறி நீடிக்கிறது. அத்துறையினர் நிர்ணயித்துள்ள தொகையை செலுத்துவது உள்ளிட்ட நடைமுறை சிக்கல்கள் குறித்து, அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. போதிய நிலம் கிடைக்காத நிலையில், அரசு பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் நாற்றுகளை விற்பனை செய்ய, தனியாக மையம் அமைக்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. விரைவில் இத்திட்டங்கள் செயல்பாட்டுக்கு அரசு நிதி ஒதுக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம்,'' என்றார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us