/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நஞ்சராயன் குளம், திருமூர்த்தி மலை மேம்படுமா?
/
நஞ்சராயன் குளம், திருமூர்த்தி மலை மேம்படுமா?
ADDED : பிப் 17, 2024 11:47 PM

'திருமூர்த்தி மலை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில், பயணிகளுக்கு போதிய அடிப்படை கட்டமைப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்,' என, கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
திருப்பூர் மாவட்ட சுற்றுலா வளர்ச்சி மற்றும் சுற்றுலா தொழில் முனைவோர் கூட்டம், கலெக்டர் கிறிஸ்துராஜ், தலைமையில் நடந்தது. இதில், வனத்துறை சார்ந்த விஷயங்களை கலெக்டர் கேட்டறிந்தார்.தமிழகத்தின், 17வது பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ள நஞ்சராயன் குளத்தின் வளர்ச்சிக்கு, வனத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்து கேள்வி எழுப்பினார்.
'நிதியுதவி தேவைப்படும்போது, சுற்றுலாத்துறைக்கு திட்ட கருத்துரு சமர்ப்பிக்கலாம்' எனவும் அறிவுறுத்தினார். திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் பஞ்சலிங்க அருவியில், சுற்றுலா பயணிகளுக்கு போதிய அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
திருமூர்த்தி அணைப்பகுதியில் செயல்படாமல் உள்ள படகு இல்லத்தை செயல்படுத்த சுற்றுலாத்துறை, தளி பேரூராட்சி, திருமூர்த்தி மலைவாழ் மக்கள் அமைப்பு மற்றும் நீர்வளத்துறையினர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என, அறிவுறுத்தினார். சுற்றுலா தொழில் முனைவோர், சுற்றுலா துறையின் www.tntourismtors.com என்ற இணைய தளத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.