/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நொய்யல் - நல்லாறு கூடுதுறை உருவாகுமா?
/
நொய்யல் - நல்லாறு கூடுதுறை உருவாகுமா?
ADDED : டிச 21, 2025 05:53 AM

'மீள முடியா அவலத்தில் சிக்கியுள்ள நல்லாறு மீட்டெடுக்கப்பட்டு, அதில் நன்னீர் பாய்ந்தால், பக்தர்கள் கூடும் புனித தலமாக மாறும்' என்கிறார், திருப்பூர் வரலாற்று ஆய்வு மைய அமைப்பாளர் சிவதாசன்.அவர் கூறியதாவது:
கொங்கு நாட்டில் உள்ள சிவ ஸ்தலங்கள் ஏழில், அவிநாசி திருப்புக்கொளியூர், திருமுருகன்பூண்டி என இரு திருத்தலங்களை தழுவிச் செல்லும் புனித நதியாக விளங்குவது, நல்லாறு. இந்த ஆறு முதன்முதலில், அன்னுார் மன்னீஸ்வரர் கோவில் பகுதியில் உருவாகி, கருவலுார் மாரியம்மன் கோவிலை தழுவி, அவிநாசி சுந்தரப்பெருமான் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் கோவில், மாதவி வனேஸ்வரர் கோவில் வழியாக பெரிய சர்க்கார்பாளையம், சுக்ரீஸ்வரர் கோவிலை வந்தடைகிறது. பின், நொய்யலாற்றில் கலக்கிறது.
நதிக்கரை நாகரிகம்
அக்காலத்தில், நதிக்கரையில் தான் நாகரிகம் தோன்றியது. அதன்படி, நல்லாற்று கரை நெடுகிலும், அக்காலத்தில் மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள், தடயங்கள் உள்ளன. திருமுருகன்பூண்டி, நல்லாற்று பாலத்தின் மேற்கே ஆற்றங்கரை காட்டுப்பகுதியில் 'நிறைபூதி மேடு' எனப்படும் சாம்பல் மேடுகள் காணப்படுகின்றன.
பழமைச்சின்னங்கள்
பூண்டியின் கிழக்கே, நல்லாற்று கரையோரம் உள்ள வெங்கமேடு பூம்பாறை ஆகிய இடங்களில், 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்படைச் சின்னங்கள் காண கிடைத்திருக்கின்றன. பாண்டியன் நகரிலும், பெயருக்கேற்ப நிறைய பாண்டியன் குழிகள் இருந்துள்ளன.
பி.என்.ரோடு நல்லாறு பாலத்தின் மேட்டில் உள்ள மும்மூர்த்தி நகரிலும், பெருங்கற்படை சின்னங்கள் கிடைத்துள்ளன. நல்லாற்று கரையோரம் உள்ள ஊர்களான கஞ்சம்பாளையம், சின்ன பொம்மநாயக்கன்பாளையம் மற்றும் மண்ணரை கேட்டு தோட்டம் பகுதிகளை ஒட்டிய, அக்கால மக்களின் வாழ்விடங்களை அடுத்துள்ள ஈமக்காடுகளில், பெருங்கற்படை சின்னங்கள் எனும் கல்வட்டங்கள் காணப்படுகின்றன.
புலப்படும் தொன்மை
நல்லாறு பாய்ந்தோடும் பகுதி முழுக்க, ஆங்காங்கே, 2,000 ஆண்டுகளுக்கு முன் மக்கள் வாழ்ந்ததன் அடையாள எச்சங்கள் காணப்படுகின்றன. இதன் மூலம் நல்லாற்றின் தொன்மை புலப்படும்; இது பெருமைக்குரிய விஷயமும் கூட.சர்க்கார் பெரியபாளையத்துக்கு கிழக்கே, ஊத்துக்குளி சாலையில், சற்று தொலைவில் நல்லாற்று பாலம் உள்ளது. அதில் புகும் இந்த ஆறு, 3 கி.மீ., தொலைவில், கூடுதுறை தோட்டம் என்ற இடத்தில் நொய்யலில் கூடி சங்கமிக்கிறது. இந்த இடம் சுத்தம் செய்யப்பட்டு, பவானி கூடுதுறை போன்று கர்ம காரியங்கள் செய்வதற்கு ஏற்ற இடமாக மாற்றப்பட்டால், திருப்பூரிலும், 'நல்லாறு - நொய்யலாறு - கூடுதுறை' என்ற புனித தலம் உருவாகும்.
---
நல்லாறு வழித்தடத்தில் காணப்படும் தொல்லியல் எச்சங்கள்.
நல்லாறு பாய்ந்தோடும் பகுதி முழுக்க, ஆங்காங்கே, 2,000 ஆண்டுகளுக்கு முன் மக்கள் வாழ்ந்ததன் அடையாள எச்சங்கள் காணப்படுகின்றன. இதன் மூலம் நல்லாற்றின் தொன்மை புலப்படும்; இது பெருமைக்குரிய விஷயமும் கூட.

