/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துணை முதல்வரிடம் 'தப்ப' மக்கள் மனுக்கள் தள்ளுபடி?
/
துணை முதல்வரிடம் 'தப்ப' மக்கள் மனுக்கள் தள்ளுபடி?
ADDED : டிச 24, 2024 11:38 PM

திருப்பூர்:துணை முதல்வரின் ஆய்வில் தப்பிப்பதற்காக, திருப்பூர் மாவட்ட அதிகாரிகள், நிலுவை மனுக்கள் ஏராளமானவற்றை தள்ளுபடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், 19ம் தேதி துணை முதல்வர் உதயநிதி ஆய்வுக்கூட்டம் நடத்தினார். முன்னதாக, சென்னையில் இருந்து வந்த குழுவினர், மாவட்டம் முழுதும் மக்களை நேரடியாக சந்தித்தும், கள ஆய்வுகள் நடத்தியும், அறிக்கை தயாரித்து, துணை முதல்வரிடம் அளித்து இருந்தனர்.
சுதாரித்து கொண்ட திருப்பூர் மாவட்ட அதிகாரிகள், நிலுவை மனுக்கள் அதிகளவில் வைத்திருந்தால், துணை முதல்வரின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என கருதி, மாதக்கணக்கில் நிலுவையில் இருந்த ஏராளமான மனுக்களை, ஒருவாரம் முன்னதாக, தள்ளுபடி செய்து விட்டனர். மனு அளித்த மக்கள் விரக்தி அடைந்தனர்.
திருப்பூரை சேர்ந்த சரவணன் என்பவர், பொது பிரச்னைகள் தொடர்பாக, 2021 முதல் இம்மாதம் வரை வழங்கியிருந்த 27 மனுக்களுக்கு, துணை முதல்வரின் ஆய்வு காரணமாக, அவசர கதியில் மூன்றே நாளில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
இதே போல பொதுமக்கள் பலரது மனுக்கள், உரிய நடவடிக்கை எடுக்காமலும், எவ்வித காரணமும் குறிப்பிடாமலும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு மனுக்கள் தள்ளுபடி செய்தது குறித்து, திருப்பூர் கலெக்டரிடம் நேற்று, சரவணன் மனு அளித்தார்.
கலெக்டர் விளக்கம்
கலெக்டர் கிறிஸ்துராஜிடம் கேட்டபோது, 'மக்களின் மனுக்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தவறுதலாக மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தால், மீண்டும் பரிசீலனை செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.