/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தி.மு.பூண்டியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா மாவட்ட நிர்வாகம்?
/
தி.மு.பூண்டியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா மாவட்ட நிர்வாகம்?
தி.மு.பூண்டியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா மாவட்ட நிர்வாகம்?
தி.மு.பூண்டியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா மாவட்ட நிர்வாகம்?
ADDED : அக் 21, 2025 10:56 PM

திருப்பூர்: திருமுருகன்பூண்டி நகராட்சியில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி, நீர்வளத்துறை ஓடையை ஒட்டி நடந்து வரும் நிலையில், நில வகை மாற்றம் செய்வதற்கான முயற்சியில், பூண்டி நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
திருமுருகன்பூண்டி நகராட்சியில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி, அவிநாசி - திருப்பூர் நெடுஞ்சாலையோரம், ராக்கியாபாளையம் என்ற இடத்தில் நடந்து வருகிறது.
நல்லாறு ஓடையை ஒட்டி கட்டுமானப்பணி நடந்து வரும் நிலையில், வரும் நாட்களில் மக்களின் ஆட்சேபனை எழாமல் இருக்க, நீர்வளத்துறை உள்ளிட்ட சம்மந்தப்பட்ட துறைகளின் அதிகாரபூர்வ அனுமதி பெற்று கட்டுமானப்பணி தொடர வேண்டும் என, பூண்டி மா.கம்யூ., கட்சியினர் மற்றும் கவுன்சிலர்கள் வலியுறுத்தி வந்தனர்; இக்கோரிக்கையை வலியுறுத்தி, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, கமிஷனரிடம் மனு வழங்கினார்.
இதுதான் திட்டம்! இதன் தொடர்ச்சியாக, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப்பணி தொடர்பாக, பூண்டி நகராட்சி கமிஷனர், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
முதல்நிலை நகராட்சியான திருமுருகன்பூண்டியில், 2023ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, மக்கள் தொகை, 36 ஆயிரத்து 826. நகராட்சியில், 14 இடங்களில், கால்வாய் வழியாக வெளியேறும் கழிவுநீர், நல்லாற்றில் கலப்பதால், ஆறு மாசுபடுகிறது.
இதனை தவிர்க்க, நகராட்சி நிர்வாகம் வாயிலாக, 'துாய்மை பாரத இயக்கம் 2.0' திட்டத்தின் கீழ்,கழிவுநீர் சேகரிக்கும் தொட்டிகள் அமைத்து, அதில் தேங்கும் கழிவுநீரை, மோட்டார் பம்ப் வாயிலாக நீரேற்றம்செய்து, கழிவுநீர் சுத்தி கரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்து, நல்லாற்றில் வெளியேற்றும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகிறது.
அத்துடன், ஓடைக்குள் ஏழு இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தி, ஓடையில் வரும் கழிவை, அதே இடத்தில் சுத்திகரித்து, சுத்திகரிக்கப்பட்ட நீரை ஓடையில் கலக்கவிடும் வகையில் பணிகள் துவங்கியுள்ளன. இதற்காக, ராக்கியாபாளையம் கிராமத்தில் 'வண்டிப்பாதை' என்ற வகைப்பாட்டில் உள்ள ஒரு ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
நிலவகை மாற்றம்! இந்நிலத்தை, நகராட்சிக்கு நில வகை மாற்றம் செய்து தருமாறு, நில அளவை கமிஷனருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, 14.80 கோடி ரூபாய் மதிப்பில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு, அக்., மாதம் நகராட்சி நிர்வாக தலைமை பொறியாளரின் தொழில்நுட்ப அனுமதி பெறப்பட்டு, பணிகள், டெண்டர் விடப்பட்டு, கடந்த, மார்ச் முதல் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், இப்பணிகளை ஓடை பகுதியில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உள்ளூர் அரசியல் கட்சி பிரமுகர்கள், அவ்வப்போது பொதுமக்களை திரட்டி மறியல் செய்து, எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
எனவே, இப்பணியின் முக்கியத்துவம் கருதி, பணியை தொடர்ந்து மேற்கொள்ள, நீர்வளத்துறை செயற் பொறியாளரின் அனுமதியை பெற்றுத்தர, பரிந்துரை செய்ய வேண்டும்.
இவ்வாறு, அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.