/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மஞ்சப்பை திட்டம் மீண்டும் புத்துணர்வு பெறுமா?
/
மஞ்சப்பை திட்டம் மீண்டும் புத்துணர்வு பெறுமா?
ADDED : ஜூலை 13, 2025 01:22 AM

பல்லடம் : முடங்கிப் போன 'மீண்டும் மஞ்சப்பை' திட்டம் மீண்டும் வருமானால், குறு சிறு தொழில்துறையினர் பலரும் பயனடைவார்கள் என, பல்லடம் பகுதி ஜவுளி தொழில் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து விசைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர் சக்திவேல் கூறியதாவது:
கடந்த 2021 கொரோனா காலகட்டத்தில், தமிழக அரசால் முன்னெடுக்கப்பட்ட 'மீண்டும் மஞ் சப்பை' திட்டத்தால், ஜவுளி தொழில் துறை சார்ந்த பலரும் பயனடைந்தனர்.
காடா துணிப்பை ஆர்டர்கள் அதிகரித்ததன் காரணமாக, ஜவுளி உற்பத்தி தொழில் வேகமெடுத்ததுடன், குறு சிறு தொழில் நிறுவனங்களின் ஆர்டர்கள் அதிகரித்து எண்ணற்ற தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்றனர். பொதுமக்களும் நெகிழி பைகளை தவிர்த்து, துணிப்பைகளை வாங்கி பயன்படுத்த துவங்கினர்.
வியாபார நோக்கத்தில் மட்டுமன்றி, சுகாதார அடிப்படையிலும் இது நல்ல ஒரு மாற்றமாக கருதப்பட்டது. நாளடைவில், 'மீண்டும் மஞ்சப்பை' திட்டம் தொய்வடைந்து, 'மீண்டும் நெகிழிப்பை' புழக்கத்துக்கு வந்தது.
துணி பைகளின் பயன்பாடு அதிகரித்ததால், திருப்பூர் - கோவை மாவட்டங்களில் உள்ள விசைத்தறி நிறுவனங்கள் அதிக அளவில் பயனடைந்து வந்தன. குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் மட்டும், 5 லட்சம் துணிப்பைகள் கொரோனா காலகட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன.
அதிகப்படியான மகளிர் சுய உதவி குழுவினர் இத்திட்டம் மூலம் பெருமளவு பயனடைந்தனர். நல்ல நோக்கத்துடன் தமிழக அரசு கொண்டுவந்த திட்டத்தை அதிகாரிகள் முறையாக செயல்படுத்தவில்லை. இதன் விளைவாக, பொதுமக்களிடம் நெகிழிப் பைகளின் பயன்பாடு பெருகிவிட்டது.
எனவே, தமிழகம் முழுவதும் சோதனைகளை தீவிரப்படுத்தி, நெகிழிப் பைகளின் தயாரிப்பு மற்றும் பயன்பாட்டை முழுமையாக நிறுத்த வேண்டும். தமிழக அரசின் சிறந்த திட்டமான 'மீண்டும் மஞ்சப்பை' திட்டத்தை, மீண்டும் கொண்டுவர தமிழக அரசு முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மெத்தனத்தால் முடக்கம்
''மீண்டும் மஞ்சப்பை' திட்டத்தைத் தொடர்ந்து, கொரோனா காலகட்டத்தில் நெகிழிப் பைகளின் பயன்பாடு குறைந்து, பொதுமக்கள் துணிப் பைகளை அதிகம் பயன்படுத்த துவங்கினர். தமிழக அரசு கொண்டுவந்த இந்த சிறந்த திட்டம், அதிகாரிகளின் மெத்தனம் காரணமாக முடங்கியது. இதன் விளைவாக, மீண்டும் நெகிழி பைகள் தலை துாக்கி விட்டன. இது, காடா துணி பைகளின் உற்பத்தியையும் பாதித்தது. தீவிர கண்காணிப்பு மூலம், நெகிழிப்பை பயன்பாட்டை தடுத்து, துணிப்பை பயன்பாட்டை கொண்டு வந்தால் மட்டுமே, சுற்றுச்சூழல் பாதிப்பு குறைவதுடன், ஜவுளி உற்பத்தி தொழிலும் மேம்படும்,'' என்றார் சக்திவேல்.