/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நல்லாறு அணை திட்டம் நனவாகுமா? முதல்வர் அறிவித்தும் பொ.ப.து. மவுனம்
/
நல்லாறு அணை திட்டம் நனவாகுமா? முதல்வர் அறிவித்தும் பொ.ப.து. மவுனம்
நல்லாறு அணை திட்டம் நனவாகுமா? முதல்வர் அறிவித்தும் பொ.ப.து. மவுனம்
நல்லாறு அணை திட்டம் நனவாகுமா? முதல்வர் அறிவித்தும் பொ.ப.து. மவுனம்
ADDED : செப் 11, 2025 09:21 PM

உடுமலை; பி.ஏ.பி., யில், நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும், ஆனைமலையாறு, நல்லாறு அணை திட்டத்தை செயல்படுத்த, கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்க சிறப்பு குழு அமைக்க வேண்டும் என, கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக - கேரள எல்லையில் பரந்து விரிந்துள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் உருவாகி கடல் நோக்கி பாயும் சிற்றாறுகளில் கிடைக்கும் தண்ணீரை தேக்கி, பாசனத்துக்காக பயன்படுத்த, பி.ஏ.பி., பாசன திட்டம் உருவாக்கப்பட்டது.
கடந்த, 1961ல், இரு மாநிலங்களிடையே ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, அணைகள் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர், 1962ல், கட்டுமான பணி துவங்கி, 1967ல் நிறைவு பெற்றது.
அதன்படி, திட்டத்தில், மேல்நீராறு, கீழ்நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், துாணக்கடவு, பெருவாரிப்பள்ளம், ஆழியாறு, திருமூர்த்தி மற்றும் உப்பாறு அணைகள் கட்டப்பட்டன.
பாசனம் மற்றும் நீர் மின் உற்பத்திக்காக உருவாக்கப்பட்ட இந்த உன்னத திட்டத்தால், கோவை, திருப்பூர் மாவட்டங்களில், தற்போது, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
திட்டத்தின் துவக்கத்தில், பாசனத்துக்கு ஆண்டுக்கு ஒரு முறை, 6 மாத காலம் வரை திருமூர்த்தி அணையிலிருந்து பிரதான கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது.
ஒரு லட்சம் ஏக்கருக்கு, நிறைவான பாசனம் இத்திட்டத்தில் வழங்கப்பட்டு, நெல், கரும்பு, வாழை, பருத்தி ஆகிய சாகுபடிகள் மேற்கொள்ளப்பட்டன.
பல்வேறு அரசியல் காரணங்களால், பாசன பரப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, 3.77 லட்சம் ஏக்கராக உயர்ந்தது. ஆனால், அதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் இல்லாமல், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, பாசனத்துக்கு, மூன்று சுற்று வழங்குவதே, கேள்விக்குறியானது.
வறட்சியால் பாதிப்பு பி.ஏ.பி., ஆயக்கட்டு பகுதிகளில், பருவமழை போதியளவு பெய்வதில்லை. கடைமடை பகுதியிலும், உப்பாறு அணை பாசனப்பகுதியிலும் வறட்சி நிரந்தரமாக உள்ளது.
பருவநிலை மாற்றத்தால், மழை குறைந்தாலும், ஆட்சியாளர்கள் பி.ஏ.பி., பாசன திட்டத்தை பராமரிக்கவும், மேம்படுத்தவும், உரிய கவனம் செலுத்தியிருந்தால், இந்த அவலம் ஏற்பட்டிருக்காது என்பது விவசாயிகள் கருத்தாக உள்ளது.
நல்லாறு அணை திட்டம் பி.ஏ.பி., பாசன திட்ட ஒப்பந்தபடி, கேரள இடைமலையாறு அணையும், தமிழக அரசு, ஆனைமலையாறு, நல்லாறு அணைகளையும் கட்ட வேண்டும்.
இடைமலையாறு கட்டி முடிக்கப்பட்ட பிறகு, தமிழக அணைகளை கட்டலாம் என்பது ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாகும்.
இடைமலையாறு அணை கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டில் இருந்தாலும், கட்டுமான பணிகள் முடிந்தது என்பதற்கான சான்று வழங்காமல், கேரள அரசு இழுத்தடித்து வருகிறது.
கடந்த, 30 ஆண்டுகளுக்கும் மேலாக, இப்பிரச்னை நீடித்தாலும், தமிழக அரசு போதுமான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.
இதனால், தொகுப்பு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்யும் போது, குறிப்பிட்ட அளவு தண்ணீர் வீணாக கடலுக்குச்சென்று வருகிறது. தமிழக - கேரள சோலையாறு அணைகளுக்கு பருவமழை சீசனில், சராசரியாக, 16.55 டி.எம்.சி., தண்ணீர் கிடைக்கிறது.
இதில், கேரளாவுக்கு வழங்கியது போக, மீதமுள்ளது மற்றும் நீராறு, ஆனைமலையாற்றில் இருந்து கிடைக்கும், 14 டி.எம்.சி., தண்ணீர் சோலையாற்றிலிருந்து பரம்பிக்குளத்துக்கு கொண்டு வரப்படுகிறது.
மேல்நீராறு, கீழ்நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், துாணக்கடவு வழியாக இந்த தண்ணீர் சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையத்துக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து, காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் பெற, நான்கு நாட்களாகிறது.
மழைக்காலத்தில், கூடுதல் தண்ணீர் கிடைத்தாலும், அதை, திருமூர்த்திக்கு கொண்டு வர எவ்வித கட்டமைப்பு வசதிகளும் இல்லை.
மேலும், அதிக மழைப்பொழிவு உள்ள, மேல்நீராறு அணையிலிருந்து மட்டும், ஒவ்வொரு பருவமழை சீசனிலும், 9 டி.எம்.சி., வரை தண்ணீர் வீணாகி, கடலுக்கு செல்கிறது. இந்த தண்ணீரை, திருப்பி, நல்லாறு அணை கட்டி, அதில் தேக்கி வைத்தால், இரு மாவட்ட, விவசாயத்துக்கும், போதுமான அளவு தண்ணீர் வழங்க முடியும்.
விழித்துக்கொள்ளுமா அரசு? மேல்நீராறு அணையிலிருந்து, வடக்கு நோக்கி, குறுகிய துாரம், சுரங்கப்பாதை அமைத்து, மேற்குத்தொடர்ச்சி மலை குழிப்பட்டி அருகே, நல்லாறு அணை கட்டி தண்ணீர் தேக்கலாம். அங்கிருந்து, திருமூர்த்தி அணைக்கு, 4 மணி நேரத்தில், தண்ணீர் எட்டும் வகையில், கால்வாய் அல்லது குழாய் அமைக்க வாய்ப்புள்ளது.
நல்லாறு அணை, 7.25 டி.ம்.சி., கொள்ளளவு, 94.75 மீ., உயரம், 714 மீ., நீளத்துக்கு, கட்ட, திட்டமிடப்பட்டது. இந்த அணைக்கு, தண்ணீர் கொண்டு வர, 14 கி.,மீ., துாரம் சுரங்கப்பாதை அமைத்து, வழியில், 120 மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள, நீர் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கலாம் என்ற கருத்துருவும், விவசாயிகள் ஆலோசனை அடிப்படையில், விவசாயிகள் சங்கம் சார்பில், அரசுக்கு தொடர்ந்து சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது.
ஆனைமலையாறு, நல்லாறு அணை திட்டத்தை செயல்படுத்த, கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் வகையில், அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் சிறப்பு குழு அமைக்கப்பட்டது.
இரு மாநில அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளை உள்ளடக்கிய மூன்று ஆலோசனை கூட்டங்களும் நடந்தது. அதன்பின்னர், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சமீபத்தில் உடுமலையில் நடந்த நிகழ்ச்சியில், ஆனைமலையாறு, நல்லாறு அணை திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். அதன்பின்னரும், பொதுப்பணித்துறை வாயிலாக அதற்கான பணிகள் எதுவும் துவங்காததது இரு மாவட்ட விவசாயிகளிடையே விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.