/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு மீண்டும் நடத்தப்படுமா?
/
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு மீண்டும் நடத்தப்படுமா?
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு மீண்டும் நடத்தப்படுமா?
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு மீண்டும் நடத்தப்படுமா?
ADDED : ஜூலை 05, 2025 11:38 PM

சிறு வயதிலேயே குழந்தைகள் மத்தியில் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தி, அவர்களது சிந்தனையை வளர்த்தெடுப்பது, காலத்தின் அவசியம். இந்த உணர்வு இன்றல்ல, நேற்றல்ல; பல ஆண்டுகளுக்கு முன்பே, மாணவர்கள் மத்தியில் விதைக்கப்பட்ட ஒன்றுதான்.பள்ளி பருவத்திலேயே மாணவர்களுக்கு அறிவியல் அறிவை புகுத்தி, அவர்களை அறிவியல் கண்டுபிடிப்பில் ஈடுபடச் செய்யும் நோக்கில், மத்திய அரசின் சார்பில், ஆண்டுதோறும் 'தேசிய அறிவியல் காங்கிரஸ்' எனப்படும் அறிவியல் மாநாடு நடத்தப்பட்டு வந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாநிலத்தில் இந்த மாநாடு நடத்தப்படுவது வழக்கம்.
இதையொட்டி, ஒவ்வொரு மாவட்டத்திலும் வட்டார அளவில் துவங்கி, மாவட்ட, மாநில அளவில் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டு, சிறந்த மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். அவர்கள் தேசிய மாநாட்டில் பங்கேற்க அழைத்துச் செல்லப்படுவர். நாட்டின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் மாணவ, மாணவியர் பங்கேற்பர். சிறந்த முறையில் அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தி, அதுதொடர்பாக விளக்கமளிக்கும் மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்படும்.
மாநாடு மற்றும் அறிவியல் போட்டியை, மத்திய அரசின் தொழில் நுட்பத்துறை, தேசிய அறிவியல் தொழில்நுட்ப பரிமாற்ற குழுமம், அந்தந்த மாநிலங்களில் செயல்படும் அறிவியல் தொழில் நுட்பக்கழகம் மற்றும் தன்னார்வல இயக்கங்கள் ஒருங்கிணைத்தன.
விஞ்ஞானிகளுக்கும் வாய்ப்பு
அதேபோல், நாடு முழுக்க உள்ள விஞ்ஞானிகளை ஒருங்கிணைத்து, அவர்களது வாயிலாக அறிவியல் கண்டுபிடிப்பு மற்றும் ஆலோசனைகளை பெறும் நோக்கில், ஆண்டுதோறும் தேசிய விஞ்ஞானிகள் மாநாடும் நடத்தப்பட்டு வந்தது. தமிழகத்தில், இந்த இரு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஏற்றுள்ளது. அந்தந்த காலக்கட்டத்திற்கேற்ப அறிவியல் முன்னேற்றம் சார்ந்து தலைப்புகள் வழங்கப்படும்; கருப்பொருளும் அறிவிக்கப்படும். ஆனால், இந்த இரு நிகழ்ச்சிகளும் கடந்த இரு ஆண்டுகளாக நடத்தப்படுவதில்லை. இது, அறிவியல் மீது ஆர்வமுள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.